indian movies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
indian movies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் I - விமர்சனம்

வணக்கம்,

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - இந்த வரலாற்று-கற்பனை புதினத்திற்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. கிட்டதட்ட 70 ஆண்டு கால சினிமா ஜாம்பவான்களின் கனவு  இது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் படமாக முதலாம் பாகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனை நாவலை படித்தவர்கள் ஒவ்வொருத்தரின் மனதிலும் அதன் கதாபாத்திரங்களும், உருவங்களும் நிழலாகவே உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் திரைபாத்திரங்களில் மூலம் ஓரளவு சரியாக தேர்ந்தெடுத்துள்ளதாகவே பட போஸ்டர்கள் மூலம் அறியலாம். 

அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத் குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்கடியானாக ஜெயராம், பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, பூங்குழலியாக ஐஸ்வர்யா மேனன், பெரிய வேளானாக பிரபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டிரெய்லரே எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் தான் இருந்தது. கிராஃபிக்சில் சோழ நாடும், பழைய தஞ்சையும் கோட்டையும், இயற்கை வளங்களும், போர் கட்சிகளும் பிரமிக்க வைக்கின்ன்றன. Color tone பற்றி சிலர் குறை கூறினார்கள். எனக்கு அது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை. திருநீறு பட்டை போடாமல் திலகம் இட்டுள்ளனர் என கூறினார்கள்; அதையும் கிராபிக்சில் சிறிய பட்டையை  போட்டு சமாளித்து விட்டனர்.

ஏ.ஆர். ரகுமானின்  இசையில் எல்லா பாடலும் துள்ளலாகவே இருக்கிறது. எப்போதும் போல பாடல்களில் ஏ.ஆர். ரகுமானின் குரல் முதலில் கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர் கேட்க கேட்க அதுவே favourite லிஸ்டலில் வந்து விட்டது.  'பொன்னி நதி ' மற்றும் 'ராட்சச மாமனே' பாடல்களை திருப்பி திருப்பி கேட்டு கொண்டிருக்கிறேன்.  

ponniyin-selvan-review

நாவல் படிக்காதவருக்கும் கூட அரசல் புரசலாக கதை தெரிந்திருக்கும். கடந்த ஒரு மாத காலமாக எல்லா மீடியா களிலும் இதை பற்றிய ப்ரோமோஷன்தான் ஓடி கொண்டிருக்கிறது.  பொன்னியின் செல்வன் சிறு குறிப்பு வரைக என்று கேட்டால் கதை, கதை மாந்தர்கள், அவர்களின் வரலாறு, என எல்லாவற்றையும் 10 நிமிட விடீயோக்களில் புட்டு புட்டு வைக்கின்றனர். 

கல்கியின் கதையில் பல பாத்திர படைப்புகள் உண்டு, அவை எல்லாவற்றிற்கும் நல்ல அறிமுகமும், முன்கதையும் இருக்கும். ஆனால் இதில் பல கதாபாத்திரங்கள் திடீரென தோன்றி மறைகிறது.  பொன்னியின் செல்வன் என்று சொன்னாலே சில விஷயங்கள் நியாபகம் வரும். ஆடிப்பெருக்கு, வீரநாராயண ஏரி, அனுராதாபுரம், கோடியக்கரை, இன்னும் சில... இதில் ஏதுவுமே படத்தில் இல்லை. இடம் காட்டப்பட்டிருக்கலாம். ஆனால் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சேர்க்க முடியாதுதான்; ஆனாலும் முழுமையாக ஏற்க முடியவில்லை. கதை படித்ததாலயோ என்னவோ?!?! 😬  

வால் நட்சத்திரம் தோன்றலில் உலகநாயகனின் வாயிஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது சோழ சாம்ராஜ்யத்தின்  கதை. எல்லா அரச கதைகளில் வருவது போலவே இதிலும் வீரம், வஞ்சனை, துரோகம், பாசம், நட்பு, விசுவாசம், காதல் என எல்லாம் இருக்கிறது. நாவலில் இருக்கும் கதையை சற்றே மாற்ற வேண்டிய இடங்களில் மாற்றி மெருகூட்டி எடுக்க முயற்சி செய்துள்ளனர். படம் முழுக்க வந்தியதேவன் முழுக்க வலம் வந்து கார்த்தி நன்றாகவே நடித்துள்ளார். கூடவே வரும் ஆழ்வார்க்கடியான் வந்து நம்மை அவ்வப்போது சிரிக்க செய்துவிட்டு போகிறார். ஆதித்த கரிகாலனாக விக்ரம் எப்போது வீரதாபத்தோடும், கோபத்தோடும் நடிப்பை வெளிப்படியிருக்கிறார். ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் பாத்திரத்துக்கு அழகும், தேஜஸும் உடைய வீரமான இளவரசராகவே தெரிகிறார். அழகு பதுமைகளாக திரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் படம் நெடுக ஆக்கிரமித்து செல்கின்றனர். வஞ்சமும், கோபமும் கண்ணிலேயே காட்டி கவர்கிறார் பழுவூர் ராணி. அப்பப்பா!!! எனக்கு என்னவோ பழூவூர் ராணியை விட இளைய பிராட்டி தான் அழகாக கவர்ந்து ஜொலிப்பதாக தெரிகிறார். சரத்குமாரும், பார்த்திபனும் பழுவேட்டரையர்கள் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதம். மற்ற பாத்திரங்கள் எல்லாம் செம்மையாக அவர்களுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்துள்ளனர். கல்கியின் கதை தெரியாமல் பார்ப்பவர்களுக்கும் கூட புரியும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இறுதியில் அருள்மொழிவர்மன் கடல் கொண்டு போவதில் முடிகிறது முதல் பாகம். வேறு ஏதாவது இடத்தில முடித்திருக்கலாம் என தோன்றுகிறது. End credit ஆக ஊமை பெண்மணி யார் என காட்டி முடிக்கிறார்கள்!🙏

பொன்னியின் செல்வன் தீம் மியூசிக் ஏற்கனவே நன்கு அறிந்த/கேட்ட இசை போல எனக்கு இருந்தது. என்னவென தெரியவில்லை.  கிராஃபிக்ஸ் காட்சிகளில் நதிக்கரையும், தஞ்சை கோட்டையும், சுழக்காற்றில் கடலும் அலையும் கப்பல் சண்டைகளும் பார்ப்பதற்கு அருமையாக இருத்தது. இலங்கை தீவை மட்டும் வேற இடத்தில காட்டியிருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் அது புக்கெட் தீவு என்று! 😉  

கதை தெரிந்தவரும், தெரியாதவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கண்களுக்கும், மனதுக்கும், விருந்தாகவும், நிறைவாகவும் இருப்பார் நமது பொன்னியின் செல்வன்.! 👌 

இக்காவேரி மைந்தனின் கதை, பல்லவ, பாண்டிய, சோழ நாடுகளை தவிர மற்ற நாடுகளான சேர நாடு, இராட்ஷக்கூடம், பாதாமி, வேங்கிநாடு, மராத்தியம் ஆகியவற்றில் தங்கு தடையின்றி ஓடி, பேசப்படுவது சற்றே சிரமம் என நினைக்கிறேன். என்னதான் இந்திய வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தி என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், அவர்களுடைய ஊரில் எடுபடும் என தோன்றவில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது கதையில் வரும் பெயர்கள், கதை நடக்கும் ஊர்கள் மற்றும் கலாச்சாரம். நாம் பெருமையாக பேசி கொள்ளலாம், அவர்களுக்கு புரியுமா/பிடிக்குமா என தெரியவில்லை. உதாரணம் சாயிரா நரசிம்ம ரெட்டி, ருத்ரமாதேவி, கௌதமி புத்ர சத்தகர்னி, பழசி ராஜா, மரைக்காயர், ஜோதா அக்பர் போன்ற படங்கள் அந்த அந்த மொழிகளில் நன்றாக ஓடியது அல்லது மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது; மற்ற மொழிகளில் பெரிதாக பேச படவில்லை. நம் பொன்னியின் செல்வன் விதி விலக்காக இருக்கிறாரா என இரண்டு மூன்று நாட்களில் தெரிந்துவிடும். பாகம் II வெளிவந்த பின் அருள்மொழிவர்மனின் பட்டாபிஷேகத்தை பார்த்து, பொன்னியின் செல்வனை முழுமையாய் உளமார கண்டு சிலாகித்து களிப்படைவோம்.  வெற்றிவேல்! வீரவேல் !! 😀      


நன்றி!!!

பி. விமல் ராஜ் 

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இந்திய சினிமா 100 !

வணக்கம்,

1913 ஆம் ஆண்டு , தாதா சாகேப் பால்கே என்பவரால் "ராஜா ஹரிச்சந்திரா" என்ற முதல் முழு நீள திரைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முதல் பல முன்னேற்றங்களுக்கு பிறகு இந்திய சினிமா இப்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது அரசாங்கமும் பல கலை நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. சில திரையரங்குகளில் மக்களின் மனம் கவர்ந்த, நீண்ட நாட்களுக்கு ஓடிய திரைப்படங்கள் திரையிட பட உள்ளன.

இந்திய திரைப்படங்களின் நூறாவது ஆண்டை கொண்டாடும் இந்நேரத்தில், நாம்  எல்லா மொழிகளிலும் உள்ள படங்களின்  சிறப்பையும், கதையையும்  ரசிக்க/ அனுபவிக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் "கூகிள்" தளத்திற்கு சென்று "Indian Cinema 100" என்று தேடி பாருங்கள். உங்களுக்கே புரியும். அந்த பட்டியலில் உள்ள இணையதளங்களில் உலக தரம் வாய்ந்த இந்திய படங்கள்/ எல்லா தரப்பிலும் பிடித்தமான இந்திய படங்கள் 100 என பட்டியலிட்டு கொடுத்திருப்பார்கள். அந்த பட்டியலில் முக்கால்வாசி படங்கள், ஹிந்தி படங்களே. ஏதோ இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நல்ல படங்களே வராத மாதிரி, சொல்லி வைத்தது போல எல்லா வட இந்திய தளத்திலும், இந்தி படங்களே முன் நிறுத்தபட்டு காட்டப்பட்டுள்ளன.

நான் பார்த்த பத்து இணையதளங்களிலும் ஹிந்தி படங்களே முன் நிறுத்தபட்டிருந்தன. சிறந்த 100 படங்களில் முக்காலாசி ஹிந்தி தான்,  மீதம் உள்ள மிச்ச சொச்சம் தான் மலையாளம், தமிழ், அசாம், பெங்காலி, மராத்தி, ஒரியா என மற்ற மொழி திரைப்படங்கள்.

ஹிந்தி இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழி தான். அதிகமாக பேசபடுவதும் ஹிந்தி தான். பாலிவூட்டில் பல உலக தரமான படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் போது எல்லா மொழி படங்களையும் தான் ஒன்றாக தான் நாம் ரசிக்க / எடை போட வேண்டும்.


இன்னும் சில இணையதளங்களில் இந்திய நூற்றாண்டு சினிமாவின் சிறந்த கதாநாயகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திலிப் குமார்,
ராஜ் கபூர், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், மிதுன் சக்ரவர்த்தி, அமிதாப் பச்சன் ஆகியோரும், கதாநாயகிகளில் நர்கிஸ் டட், மது பாலா, வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவி ஆகியோர் பெயரும் படமும் இருந்தது.

அந்த படங்களின் பட்டியலில் 'செவாலியே ' சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பெயர்கள் இல்லை. இந்தியாவில் முதன் முதலில் சர்வதேச அளவில் சிறந்த கதாநாயகன் விருதை "ஆப்ரிக்க-ஆசிய திரைப்பட விழாவில் "  வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக வாங்கியவர். இந்திய சினிமாவின் பெருமையை பற்றி பேசும் போது எப்படி நடிகர் திலகத்தின் பெயரை சொல்லாமல்  இருக்க முடியும்? சினிமாவை  உலக தர வரசையில் கொண்டு சென்றவர் நமது உலக நாயகன். அவரது  படங்கள் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ரஜினிகாந்த் - சொல்லவே வேண்டாம். அவர் நடித்த "முத்து " படம் ஜப்பானில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியுள்ளது. ஆசியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இரண்டாம்  நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் பெயரை விட்டு விட்டு எப்படி இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட முடியும்?

மேலும் மலையாளத்தில் பிரேம் நசிர், செம்மீன் மது, முன்று முறை தேசிய விருது வாங்கிய மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, மோகன் லால்,  தெலுங்கில் என். டி. ராமாராவ், ரங்காராவ் , கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரை விட்டு எப்படி இவர்கள் பட்டியலிட்டார்கள் என தெரியவில்லை.

இந்தியாவின் முதல் 3D படம்மான "மை டியர் குட்டி சாத்தான் "" (மலையாளம்) படத்தை எப்படி மறந்தனர் என புரியவில்லை. எனக்கு தான் தமிழ் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாது என்றால், வலைமனைகளில் பட்டியலிட்டவர்களுக்கும் ஹிந்தி தவிர வேற எந்த மொழியும் தெரியாது போல!

நூறு வருடங்களில் வெளி வந்த சிறந்த படங்களை மொழி வாரியாக வரிசை படுத்த முடியாது என்பது எனக்கும் தெரியும். அது கடினமும் கூட. ஆனால் படங்களை வரிசைபடுத்தும் போது மொழி வாரியிலான பாகுபாடின்றி தரம் பிரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இது என் விருப்பம் மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் எல்லாருடைய விருப்பமும் இதுவாக தான் இருக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்