புதன், 19 பிப்ரவரி, 2014

என் தேசம்! என் மக்கள்! நான் !

வணக்கம்,

என் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது - ஆனால்
நடித்தால் நாடே கிடைக்கும்.

என் தேசத்தில் வீட்டில் கொள்ளையடித்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் லட்சம் கோடி ஊழல் செய்தவனை மூன்று ஆண்டுகளில் விடுவித்து விடுவார்கள்.

என் தேசத்தில் கொலை பாதகம் செய்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் பிரதமரை கொல்ல உதவினால் 20 வருடங்களில் விடுதலை செய்யபடுவார்கள்.



என் தேசத்தில் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட தயங்குவார்கள்- ஆனால் ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று இலவச தொலைக்காட்சி, விலையில்லா கிரைண்டர், மிக்சி வாங்குவார்கள்.

என் தேசத்தில் தேர்தலில் யாரை தேர்ந்த்தெடுக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்- ஆனால் சூப்பர் சிங்கரில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று யோசிப்பார்கள்.

என் தேசத்தில் ஒவ்வொரு வனத்தையும் செல்வமாக பார்ப்பார்கள்-ஆனால் அந்த வனங்களை அழித்து கட்டிடம் கட்டுவார்கள்.

என் தேசத்தில் விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பு என சொல்வார்கள் - ஆனால் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்றுவிடும்படி செய்வார்கள்.

என் தேசத்தில் இன ஓற்றுமை பற்றி பெருமையாக பேசுவார்கள்-ஆனால் ஒரே மொழி பேசும் மக்களின் தேசத்தை இரண்டாக பிரிப்பார்கள்.

என் தேசத்தில் மத ஒற்றுமை பற்றி மேடையில் பேசுவார்கள் -ஆனால்
அடுத்த மதத்து கோவிலை இடிப்பார்கள்.

என் தேசத்தில் அரசியல் சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை என குறை கூறுவார்கள்- ஆனால் காசு வாங்கி ஓட்டை விற்று, கர்மவீரர் போன்றோரை தோற்க்கடிப்பார்கள்.

என் தேசத்தில் கருத்து சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசுவார்கள் - ஆனால்
ஃபேஸ்புக்கில் லைக் போட்டால் உள்ளே தள்ளி விடுவார்கள்.

என் தேசத்தில் ஜனநாயகம் பற்றி பெருமைப்பட பேசுவார்கள் - ஆனால்
ஒரே குடும்பத்தினரிடம் தலைமை ஆட்சியை ஒப்படைப்பார்கள்.

என் தேசத்தில் பெண்ணியம் பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள்- ஆனால்
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு எனப் பேர் வாங்கி கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சாதி மத பேதம் இல்லாமல் ஒன்றுபடுவோம் என சொல்வார்கள்- ஆனால் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முதலில்
சாதிக்கு தான் முன்னுரிமை தருவார்கள்.

என் தேசத்தில் காவல் துறை லஞ்சம் வாங்குகிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் முந்நூறு ரூபாய் ஃபைன் கட்ட வேண்டிய இடத்தில், போக்கு காட்டி நூறு ரூபாய் அன்பளிப்பு கொடுத்து தப்பிப்பார்கள்.

என் தேசத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு காசு கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுத்து கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சினிமாவில் அரைத்ததையே அரைக்கிறார்கள் என விமர்சிப்பார்கள்- ஆனால் நல்ல படங்களை வீட்டில் டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்.
 
என் தேசத்தில் முன்னால் ஜனாதிபதியை அவமதித்தால் விட்டு விடுவார்கள்-ஆனால் சினிமாவில் ஒரு மத தீவிரவாதியை  காட்டினால் படத்தை தடை செய்ய கோருவார்கள்.

என் தேசத்தில் சமூக கருத்துகளையும், தேச பற்றினையும், நல ஒழுக்கதினையும் பற்றி நிறைய பதிவு செய்வார்கள் -ஆனால் அதை அவர்கள் மனதில் பதிய வைக்காமல், சமூக வலைதளங்களிலும், இணைய தளத்திலும் மட்டும் பதிந்து விடுவார்கள்... நம்மை போல!!!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


சனி, 1 பிப்ரவரி, 2014

இது ஹாலிவுட் கடலை மிட்டாய் !

வணக்கம்,

கிரானோலா பார்-னா (Granola Bar) என்னனு உங்களுக்குத் தெரியுமா ??? அதை தான் ஹாலிவுட் கடலை மிட்டாய் என்று சொன்னேன். நீங்க கேள்விப்பட்டதே இல்லையா ??? அப்படியென்றல் முதலில் இதை படிக்கவும்...

இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, பஜ்ஜி, போண்டா, சாம்பார், ரசம், வடை, பாயாசம், மோர் என சப்பு கொட்டி சாப்பிட்டு வந்த நம் மக்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னால் மற்ற மாநிலத்துச் சாப்பாடெல்லாம் எப்படி இருக்கும் என ருசிக்க ஆசை வந்தது. அதிலிருந்து வர ஆரம்பித்தது தான் மற்ற உணவு முறைகள் எல்லாம். அதன்பின் தான் முகலாயர் வழி வந்த பிரியாணி, பரோட்டா, வடக்கில் பிரபலமான பேல் பூரி, பானி பூரி, ஃபப், சமோசா போன்ற சாட் அயிட்டங்கள் தென்னகத்தில் பல ஓட்டல்களிலும், வீதியோர சிற்றுண்டி விடுதியிலும் வலம் வந்தன.

பிறகு நம்ம தெருக்களில் ஆந்திரா மெஸ் ஆதிக்கத்தில், காரமான சாப்பாடும், பெசரட்டும், கோங்குரா சட்னியும் கலைகட்டியது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பரிமாறப்படும் வடஇந்திய தாலிகளும் ஹைவே தாபாக்களில் கிடைக்க ஆரம்பித்தது.

பின்னர் ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ், பாஸ்தா எனச் சீன தேசத்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு சமாச்சாரங்கள் நம்ம மக்களின் பிடித்தமான உணவாக மாறியது. அதன்பின், சென்னை போன்ற பெருநகரங்களில் ஐ.டி கலாச்சாரம் ஆரம்பித்த போது, வெள்ளைக்காரன் வெண்ணெயையும், பன்னீரையும் வெறும் மைதாமாவில் தடவி, கொஞ்சம் தக்காளி நறுக்கி போட்டு, ருசி சேர்த்து பீட்சாவையும், பர்கரையும் ஊரெங்கும் நிறுவி நம் நாக்கை வசப்படுத்தினான்.

மேற்கண்ட சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாம் எப்படி,என்னனு உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த வரிசையில் வரும் மேற்கத்திய நாட்டின் இன்னமொரு (சிற்றுண்டி பண்டம்) சிற்றிடை உணவு தான் கிரானோலா பார் (Granola Bar).
 

கிரானோலா என்பது அமெரிக்க நகரங்களில் சாப்பிட்டப்படும் காலை நேர சிற்றுண்டி உணவு. ஓட்ஸ், பருப்புகள், அவல், தேன் ஆகியனவை நன்றாக வேக வைத்து, மொருமொருவென முறுவலாக்கி தின்னப்படும் ஒரு சத்தான உணவு பொருள். சில சமயத்தில் உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் சேர்ப்பதுண்டு.

நாம் வெளியில் செல்லும் போது இட்லி, பூரி, பிரட்-ஜாம், கட்டுச் சாதம் -ன்னு எப்படி எடுத்துக்கொண்டு போகிறோமோ, அதுபோல அமெரிக்கா போன்ற நாடுகளில் தொலைதூர வெளியூர் பயணம் செய்பவர்கள், நீண்ட நடைபயணம் அல்லது முகாம் செல்பவர்கள், இதை எடுத்துக் கொண்டு செல்வார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலை பளு காரணமாகக் காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடை துறப்பவர்கள், துறக்க நினைப்பவர்கள் கிரானோலாவை விரும்பி உண்பார்கள். பெரும்பாலும் இது பட்டி (bar) வடிவிலே வருகிறது. இதைப் பார்க்க கொஞ்சம் பெரிய சைஸ் கடலை மிட்டாய் போலத் தான் இருக்கும். மேலும் ஒரு பட்டியில் (bar -ல்) 90 முதல் 100 கலோரிகளே இருப்பதால், இரண்டு அல்லது மூன்று பட்டிகளைச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும் போலும். கலோரி பார்த்து ஓட்ஸ், கேலாக்கஸ் (Kellogg’s) சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


கிரானோலா பெரும்பாலும் தயிர், தேன், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், பால், அவுரி நெல்லிகள் (blue berries) மற்றப் பொருட்களுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இது கேக் அல்லது இனிப்புகள் செய்ய உபயோகப்படுகிறதாம். கிரானோலா பாரில் சேர்க்கப்படும் (flax seeds) ஆளி விதை உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் தகவலுக்கு விக்கிபீடியா.

Nature Valley என்ற அமெரிக்கத் தின்பண்ட தயாரிப்பு நிறுவனம் கிரானோலா பாரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புதுத் தில்லி ஆகிய நகரங்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வர்த்தகக் கடைகளில் விற்க முடிவு செய்துள்ளது. கூடிய விரைவில், வேலை ரொம்ப அதிகம், சாப்பிட நேரமில்லை போன்று காரணம் சொல்பவர்களுக்கு நல்ல ஒரு மாற்று வந்து விட்டது எனச் சொல்லலாம். 180 கிராம் கிரானோலா பாரின் விலை 30 முதல் 60 ரூபாய்கள் வரை இருக்கிறதாம். போகப் போகக் விலை இன்னும் குறையலாம். பதப்படுத்தாத சத்துள்ள பொருள்கள் இதில் சேர்க்கபட்டுள்ளதால், இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம் என்று சொல்லபடுகிறது. கிரானோலா பாரில் சோடியம், தேன் மற்றும் பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துள்ளதால், நீரிழிவு நோய் (சுகர்) உள்ளவர்கள் தங்கள் மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டுச் சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

எப்போதும் சமூகம், வரலாறு, அரசியல் போன்ற தலைப்புகளில் பதிவு எழுதி வருபவன், இன்று ஒரு அமெரிக்கத் தின்பண்டத்திற்கு மார்கெட்டிங் பண்ணுகிறானே என்று எண்ணிவிட வேண்டாம். கடந்த வாரத்தில், அலுவலகத்தில் நண்பர் ஒருவர் கிரானோலா பார் வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு பிடித்துப் போகவே, அதைப் பற்றி என்ன, ஏதுன்னு இணையத்தில் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். பதிவை ருசித்துவிட்டு எப்படி இருந்தது பின்னூட்டத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வெள்ளி, 24 ஜனவரி, 2014

செல்லாத ரூபாய்கள் !

வணக்கம்,

நம்மில் பலருக்கு தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருப்பதில்லை. எனக்கும் தான்! எப்பாவது தொலைக்காட்சியில் முக்கிய செய்திகள் மட்டும் பார்ப்பேன். நாள் முழுவதும் கணினியும் இணையமுமாக உட்கார்ந்திருப்பதால், முக்கிய நிகழ்வுகளும், செய்திகளும் நமக்கு உடனுக்குடன் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அண்மையில் தெரிந்து விடுகிறது. அதில் முக்கிய பங்கு சமூக வலைதளங்களுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத ஒன்று. இன்று மாலை அலுவலகம் முடிந்து, வீடு திரும்பியவுடன், பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட சில முக்கிய செய்திகளை உங்களிடம் பகிர்கிறேன்.

பகிர்வு 1

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுக்களும்  மார்ச் 31-க்கு பிறகு செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வரும் மார்ச் 31, 2014 -க்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். எதற்கு இத்தகைய மாற்றம் என்று  கேள்வி எழும் போது, பண வீக்கத்தை சரி செய்ய என்று சொல்லபடுகிறது. அதாவது போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை தடுக்கவும், நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தவும் இந்த திடீர் முடிவு என அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

2005-க்கு பிறகு அச்சடித்த ரூபாய் நோட்டுக்களை போலவே போலி (கள்ள ) ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க முடியாதா? என்று தான் எனக்கு புரியவில்லை. கள்ள நோட்டு அடிப்பவர்கள், இதை மட்டும் எப்படி விட்டு வைப்பார்கள் ?? அல்லது  இதை தடுக்க வேறு எதாவது புதிய உத்தி இருக்கிறதா??? என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தான் சொல்ல வேண்டும்.

பகிர்வு 2..

ஊட்டி தொட்டபெட்டா மலை பகுதியில் கடந்த 15 நாட்களாக பொதுமக்களுக்கும், வன துறையினருக்கும்  தண்ணி காட்டி வந்த புலி இன்று சுட்டு கொல்லப்பட்டது. ஒரு பெண் உட்பட மூன்று பேரையும், கால் நடைகளையும் இரையாக்கி வந்த அந்த புலியை பிடிக்க ரகசிய கேமராக்கள், இரும்பு கூண்டு, கும்கி யானைகள், மோப்ப நாய்கள்  என எல்லாவற்றிலும் முயற்ச்சித்து, எதிலும் பிடிபடாமல், இன்று அப்புலியை சுட்டு கொன்று விட்டனர்.

புலியை சுட்டுக் கொல்லாமல், மயக்க மருந்து கொடுத்து பிடித்திருக்கலாமே! எதற்கு நம் தேசிய விலங்கை நாமே சுட்டு கொல்ல வேண்டும் ? அதுவும் அழிந்து வரும் ஒரு உயிரினத்தை ஏன் கொல்ல வேண்டும்?  என சமூக ஆர்வலர்கள் சிலர் பொறுப்பு அக்கறையுடன் கோரி வருகின்றனர்.

நம் தேசிய விலங்காம் புலியை கொல்வது சட்டப்படி குற்றம்தான். உயிருடன் பிடிக்க முடியாமல் போனதால் தான் புலியை சுட்டு கொன்றுள்ளனர். அது மட்டுமல்லமல், காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடத்தையும், சுற்றி திரியும் இடங்களையும் அழித்து பொது ஜனமே ஆக்ரமிக்கும் போது , புலி என்ன? எல்லா மிருகமும் ஊருக்குள்ளே வரும் தான். இதை தடுக்க பலரும் போராட்டம் நடத்தி கொண்டு தான் இருகின்றனர். இணையத்திலும், சமூக வலைதளத்திலும் இந்த வனஅழிப்பை ஒழிக்கவும், அதை பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போராடி வருகின்றனர். பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இது இப்படியே போனால், "வனத்திலிருந்து வழி தவறி சென்னை நகருக்குள் புகுந்த சிறுத்தை !" என்று நம் பேரன் பேத்திகள் பேஸ்புக்கில் 'ஷேர் ' செய்வார்கள். இது கொஞ்சம் அதிக படியான கற்பனை தான். ஆனால் அப்படி  நடந்தாலும் ஆச்சிரியப் படுவதற்க்கில்லை. 

இது நமக்கு, நம் மக்களுக்கு, நம் அரசாங்கத்திற்கு என்று புரியுமோ, அன்று வரை நம் இயற்கை செல்வங்கள் எல்லாம், மேலே சொல்லப்பட்ட செல்லாத ரூபாய்களை போல தான் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 16 ஜனவரி, 2014

கந்தசஷ்டி கவசமும் சுவிசேஷ கூட்டமும் !

வணக்கம்,

இந்த பதிவில் பக்தியும், மதம் சார்ந்த என்னுடைய கருத்துகளையும், கடவுள் நம்பிக்கையையும், அவைகளை பற்றி என் மனதில் பட்டதை இங்கே பகிர்கிறேன்.

நான் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கிறிஸ்துவ பள்ளியில் படித்ததால், எனக்கு இந்து சமய மந்திரங்கள், சாமி பாட்டெல்லாம் அவ்வளவாக தெரியவில்லை. வீட்டில் எதோ ஒன்றிரண்டு  சொல்லி கொடுத்தனர். எல்லா பிள்ளைகளுக்கும் சொல்வது போல, தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும் என சொல்லிதான் என் வீட்டிலும் வளர்த்தனர். பள்ளியிலும் தப்பு செய்தாலோ, வால்தனம்/ விஷமதனம் செய்தாலோ, எல்லாம் வல்ல பரமபிதா தண்டிப்பார் என்று தான் போதித்தனர்.  பெற்றோருடன் பிள்ளையார் கோவிலுக்கு போனால் கூட, 'பாலும் தெளிதேனும்' சொல்லிவிட்டு, சிலுவை குறிபோட்டு 'ஆஃப்  ஜீசஸ் க்ரைஸ்ட் ஆமென் ' என்று தான் முடிப்பேன். ப்ரெயர் முடிந்ததும் அப்படி தான் எங்க பள்ளியிலும் சொல்லுவார்கள்.

பிறகு ஐயர்/ஐயங்கார் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பள்ளியில் படித்தேன்.  கொஞ்சம் மந்திரமும், ஸ்லோகமும் சொல்லி கொடுத்தனர். அவ்வபோது  பக்தி கதைகளும் சொல்லிக் கொடுத்தனர். என்னுடன் படித்த கிறுஸ்துவ, இஸ்லாமிய பிள்ளைகளுக்கும் அதுவே போதிக்கப்பட்டது. அப்போதும் எனக்கு பக்தியிலும், ஆன்மீகத்திலும் அதிகம் நாட்டம் இல்லை.


எனக்கென்னவோ இதுவும் ஒரு வகையில் கட்டாய மதபோதகம் போலதான் தெரிந்தது. சில பள்ளிகளில் பிள்ளைகளுக்கே தெரியாமல் இந்த கடவுள் தான் சிறந்தவர்; இந்த கடவுள் வழிபாட்டு முறைதான் சிறந்தது என்று மனதில் பதியவைத்து விடுகின்றனர். பள்ளிகூடத்தில் மாற்று மதத்தின்  நம்பிக்கைகளையும், பழக்கங்களையும் கற்று கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் கடவுள் பக்தியும், மதநம்பிக்கையும் பதிய வைப்பதை விட, நற்பண்புகளையும், தேசபக்தியையும் வளர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.

பின்னர் கல்லூரி காலங்களில் பகுத்தறிவு பேசும் நாத்திகன் போல என்னை காட்டிக் கொண்டேன். கோவிலுக்கு போவதில்லை. போகவும் இஷ்டமில்லை. யாரவது கேட்டால், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி கொண்டேன். "கோவிலுக்கு போய் சாமியை நல்லா கும்பிடு.. அப்பதான் பரீட்சையில் பாஸ் ஆவாய்..",  என்று கூறினார்கள். "கடவுளா வந்து பரீட்சை பேப்பரை திருத்த போறார்?"  என நக்கலாக கூறிவிட்டு போய்விடுவேன். ஆயினும், செமஸ்டர் ரிசல்ட் வரும் போது ரிஜிஸ்டர் நம்பரை டைப்பிவிட்டு, ரிசல்ட் விண்டோஸ் ஸ்க்ரீனில் தெரியும் வரை (30 நொடி முதல் 2 நிமிடதிற்குள்) குறைந்தது 200 முறையாவது முருகனையும், அவர் அண்ணனையும் கூப்பிட்டு விடுவேன்.

பிற்காலக்தில், வேலை தேடும் போதும், இண்டர்வ்யூ போகும் போதும்,  இந்த வேலையாவது கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வேன். அவ்வளவுதான் என் பக்தி மார்க்கம். மொத்தத்தில் எல்லோரையும் போல, கஷ்டம் வரும் போது மட்டும் கடவுளை நினைக்கும் சாதாரணன் நான்.

**********

சில மாதங்களுக்கு முன் தொலைக்கட்சியில் ஒவ்வொரு சேனல்களாக மாற்றி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு சேனலில் பிரதர் (பொதுவாக கிறுத்துவ மதத்தில்  நன்னெறிகளை போதிப்பவர், பிரதர் (Brother) என்று தான் சொல்கின்றனர் ) ஒருவர் சுவிசேஷ கூட்டம்  ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். சரி ! என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று கொஞ்ச நேரம் அவர் கூறிய 'ஞான உரையை' கேட்டேன். பதினைந்து நிமிடம் கேட்டிருப்பேன் . தாங்க முடியல! இதுவரை  நீங்கள் (கிறுஸ்துவர்  அல்லாத) எந்த ஒரு சுவிசேஷ கூட்ட உரையை கேட்கவில்லை என்றால் ஒரு முறை கேட்டு பாருங்கள். உங்களுக்கே புரியும்!

"என்னடா,  இவன் ஒரு மத கலவரத்தை உண்டாக்காமல் இருக்க மாட்டான் போலயே !!!" என்று நீங்கள் எண்ணினால், அதற்கு நான் பொறுப்பல்ல. மிச்சத்தையும் படித்து விட்டு என்னை திட்டவா, வேண்டாமா என்று முடிவு எடுக்கவும்.

சேனலில் நடந்து கொண்டிருந்த சுவிசேஷ கூட்டத்தில், அவர் ஒன்னும் தப்பாகவோ அல்லது மாற்று மதத்தினரையோ அவமதித்தோ பேசவில்லை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பைபிள் வசனங்களையும், மேற்கோள்களையும், கிறுஸ்துவின் மதம் சார்ந்த சிறு சிறு நீதி கதைகளையும், நல்ல அறிவுரைகளையும் தான் சொல்கிறார். கூட்டத்தில் கிட்ட தட்ட 1000 பேராவது இருப்பார்கள். உட்கார்ந்து கேட்கும் மக்களுக்கு இதெல்லாம் அவர்களுக்கே தெரியாதா ? அல்லது புரியாதா ? எனக்கு புரியவே இல்லை. சமீபத்தில் ஒரு  திரைபடத்தில் கூட கதாநாயகன், திருமண மேடையில் நின்று சுவிசேஷ கூட்டத்தில் பேசும் தோரணையில் எதோ இங்கிலிபீசில் பினாத்துவார். (பினாத்தியது ஹீரோ மட்டுமே...)

இத்தனை பேர் கேட்கும் போது, நமக்கு ஏன் புரியவில்லை / பிடிக்கவில்லை என யோசித்தேன். எனக்கு மட்டுமல்ல. மக்கள் பலரும், மாற்று மதத்தினரின் வழிபடுதலை, வழிபாட்டு முறையை கேட்க  அல்லது அறிய விரும்புவதில்லை. நம்மவர்களுக்கு கந்த சஷ்டிகவசத்தையோ, சுப்ரபாதமோ கேட்டால் பக்தி மார்க்கத்தில் உருகி விடுவார்கள். பலருக்கு பாட்டின் அர்த்தமே புரியாத போதும், வெறும் சாமி படத்தை காட்டினாலே பக்தியில் முழ்கி கன்னத்தில் தப்பு போட்டு கொள்வார்கள். இதே பாடல்களை வேற்று மதத்தினர் கேட்டால், எப்படி ஒன்றுமே புரியாதோ, அது போல தான் நமக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்தின் அருமை பெருமை தெரியவில்லை என நினைத்து கொண்டேன்.

இந்துகளுக்கு சுப்ரபாதம்,சஷ்டிகவசம், திருப்பாவை, சிவ புராணம், கீதை என முப்பது முக்கோடி தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் துதிபாடல்கள், கிளை கதைகள் என்று பலஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றி வரப்படுகிறது. கிறுஸ்துவ மதம் செயின்ட் தாமஸ் என்பவரால் கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கிறுஸ்துவை போற்றி பாடப்பட்ட துதி பாடல்களும், இது போன்ற கூட்டு பிரார்த்தனைகளும் தான் அவர்களுக்கு தேவாரமும், திருப்பாவையும்.

என்னை பொறுத்தவரையில் எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா மதங்களும், "நன்மையே செய்; நன்னெறி கொண்டு ஒழுக்கமாய் இரு" என்று தான் போதிக்கிறது. இதில் உயர்ந்த மதமென்றும், தாழ்ந்ததென்றும் என ஒன்றும் இல்லை. வழிபாட்டு முறையும், வழிப்பாடும் தான் வித்தியாசமே தவிர, எல்லா கடவுளும் ஒன்று தான். இது ஏன் பலருக்கு புரியவில்லை என்றுதான் எனக்கு தெரியவில்லை.

இவ்வளவும் படித்துவிட்டு, இவன் நம் மதத்திற்கு எதிராக பேசுகிறான், கேலி செய்கிறான் என்று நீங்கள் யோசித்தால், தயவு செய்து மீண்டும் இப்பதிவை முதலிருந்து படிக்கவும் !



நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதிய பாரதத்தின் ஆரம்பம் !

வணக்கம், 

அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனசுக்குள்ளே சின்ன சந்தோஷம். ஒரு வழியாக பழைய பேப்பர் ஆரம்பித்து 25-ஆவது பதிவை போட்டாகிவிட்டது. ஏதோ, எனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவு செய்து வருகிறேன். இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என் வலைப்பூவிற்கு வந்து, நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டுமென்பது என் ஆசை.

சரி நம்ம தலைப்புக்குள் வருவோம். எப்போதும் என் வலைப்பூவில் சமூகம் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என நொட்டாரம் சொல்லியே எழுதி வைப்பேன். ஆனால் இன்று கொஞ்சம் நல்ல படியாக பாராட்டி எழுத வேண்டும் என்று எண்ணம். இன்றைய முக்கிய செய்தியை படிக்க கொஞ்சம் சந்தோஷமாகதான்  இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைநகர் புதுதில்லியின் முதல்வராகிறார்!

திரைப்படங்களில் வருவது போல போன ஆண்டின் இறுதியில் 'அம் ஆத்மி' கட்சி ஆரம்பித்து, இந்த ஆண்டில் இறுதியில் முதல்வராகிவிட்டார்.
எதிர்த்து போட்டியிட்ட இரு பெரும் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, மக்கள் மனதிலேயே போராட்டம் நடத்தி, அவர்களின் நன்மதிப்பையும் பெற்று விட்டார். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், தேர்தலில் நின்று ஜெயிப்பது புதிதல்ல; பெரிதுமல்ல.

நம்ம ஊரில் எம்.ஜி.ஆரும் ,பக்கத்து தெலுங்கு தேசத்தில் என்.டி.ஆரும் இப்படிதான் கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டுக்குள்ளேயே ஆட்சியை பிடித்தனர். ஆனால், சினிமாவில் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேல் கொ(கோ)டி கட்டி பறந்துவிட்டு, அந்த செல்வாக்கை வைத்தே கோட்டையை கைப்பற்றினார்கள்.

கேஜ்ரிவால் அப்படியல்ல. ஐ.ஐ.டி- யில் பொறியியல் படித்துவிட்டு, இந்திய வருவாய் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் நாட்டின் உயரிய விருதில் ஒன்றான "ராமன் மகசேசே" விருது,  ஏழை மக்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி கொண்டு போய் சேர்த்தர்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பணியை துறந்த பின், விருதையும், பரிசு பணத்தையும் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்திற்கு கொடுத்துதவியவர். ஜன் லோக்பால் சட்டத்தின் அமலுக்காக போராட்டம் நடத்தியவரில் ஒருவர். 2011 அன்னா ஹசாரே ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். முதல்வர் பதவிக்கு இதை விட என்ன தகுதி தேவை ?

ஆனால் இன்றைய நாட்டு நடப்பில், பண பலம், அரசியல் பலம், சினிமா பலம் என எதுவும் இல்லாமல், மக்களின் மக்களாக இருந்த வேட்பாளர்களையே தேர்ந்தேடுத்து, தேர்தலில் வெற்றியும் கண்டு விட்டார். நேற்று (28-12-2013) தில்லி ராம்லீலா மைதானத்தில் பதவி பிரமாணம் ஏற்க வரும் போது மெட்ரோ ரயிலில் வந்து சேர்ந்ததாக சொல்கின்றனர். "கவுன்சிலரே 'கான்டசா'-வில் பறக்கும் போது, சி.எம். ஆட்டோவில் வர்றார்.. இந்தியா முன்னேறிடிச்சு போலருக்கே..!!! "  - என்ற முதல்வன் வசனம்  நினைவில் வருகிறது.


முதல்வரான பிறகு பிறப்பிக்கப்பட்ட முதல் ஆணையே, அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்; மீறினால் வேலை பறிக்கப்படும் என்பதுதான். பாராட்டுதலுக்குரிய ஆணை தான். மேலும் இலவச குடிநீர், மின் கட்டண குறைப்பு போன்ற ஆணைகள் விரைவில் பிறப்பிக்கபடும் என்று கூறியுள்ளார். ஆணை போடப்பட்ட வேகத்தில் செயல்படுத்தினால் தேவலை என்று தோன்றுகிறது. எனக்கென்னவோ, இது ஒரு புதிய பாரதத்தின் விடியலுக்கான ஆரம்பமாகதான் தெரிகிறது!

ஒரு சின்ன வருத்தம், இது போன்ற நல்லதொரு  மாற்றம் நம்ம தமிழகத்தில் வரவில்லையே என்று தான். புது தில்லி மக்கள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சி நடத்திய விதத்தை கண்டு தாங்காமல் தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். கேஜ்ரிவாலாவது கடைசி வரை மற்றவர்களை போல மாறாமல் இருந்தால் சரி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல !

வணக்கம்,

இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

அன்று முதல் இன்று வரை, ஒருவர் எதாவது தவறு செய்தாலோ அல்லது முறையில்லாமல் நமக்கு எதிராய் செய்தாலோ அவரை திட்டுவதற்கு, அவருடைய பிறப்பையோ, உறவையோ, சாதியையோ வைத்து கெட்ட வார்த்தையில் திட்டுவது ஒரு சிலரிடம் பழக்கமாகி விட்டது.

நம்முடைய கோபம் உச்சம் அடையும் போது, அதை வெளிக்காட்டி கொள்ள வருபவைதான் இந்த கெட்ட வார்த்தைகள். சிலரின் கோபம்  சாதாரண வார்த்தைகளில் அறிவுகெட்ட நாயே, பேயே, முண்டம், பொறுக்கி என திட்டி விட்டு அடங்கி விடும். ஆனால் சிலரின் கோபம், கொச்சை கொச்சையாய் எதிராளியை திட்டி தீர்த்தால் தான் அடங்கும்.


யாரும் அவர்தம் பெற்றோர் மூலமாகவோ, பள்ளிகூட பாடம் மூலமாகவோ கெட்ட வார்த்தைகளை கற்று கொள்வதில்லை. பதின்பருவ வயது ஆரம்பிக்கும் போது பிள்ளைகள் தன் உடன் படிக்கும் சிறார்களோடு/ சிறுமிகளோடு சேர்ந்து கற்று கொண்டு விடுகின்றனர். அவர்களுக்கு வேறு யாரோ சொல்லி தந்து விடுகின்றனர். பள்ளி செல்லாச் சிறார்களும் அவர்கள் வயதுடையவரிடமிருந்து கற்று கொள்கின்றனர். சுற்றத்தாரும், உடன் இருப்பவரும், ஊடகங்களும் வார்த்தைகளை எப்படி உபயோகிகின்றனர் என்பதை வைத்தே இளைய சமுதாயம் வளர்கிறது.

கல்லூரி மாணவர்கள் என்றால் பெண்களை கிண்டல் செய்பவர்கள் என்றும், வார்த்தைக்கு வார்த்தை ..த்தா .. ங்கொம்மா.. என்று முற்சேர்க்கையிட்டு (Prefix) பேசுவார்கள் என்று தான் திரையில் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்துவிட்டு வரும் நம்மவர்களும், பெரும்பாலும் அப்படி தான் பேசுகின்றனர்.  

திரைப்படங்களில் வரும் வெகுஜன கதாநாயகர்கள் தகாத வார்த்தைகளை திரையில் உபயோகிக்கின்றனர். திரையில் வெளியிடப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு தொலைகாட்சியில் காட்டும் போது அந்த வசனத்தை மட்டும் வாயசைக்க வைத்து விடுகின்றனர். ஒரு சில சினிமா வசன உதாரணகள்...

திஸ் இஸ் மை ஃபக்கிங் கேம் ! - THIS IS MY FUCKING GAME !

ஏய் பாடு ! கம்மினாட்டி! அவனை ஏன்டா அடிச்ச  ?

..த்தா ! ...போடறா அவன....

நீங்கல்லாம் லவ் பண்ணி ,கல்யாணம் செஞ்சு மயிறையா புடுங்க போறீங்க? 

.த்தா .. தேவிடியா பசங்களா.. இதுக்கு தாண்டா நான் சட்டை போடறது... வேலையை பாருங்கடா ...

ஒம்மாள ! உனக்கு எப்படிடா தெரியும் ? 

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் வெற்றிகரமாக வெள்ளி திரையில் வந்தவை. உணர்வுபூர்வமான காட்சிகளுக்காக இது மாதிரி வசனங்களை திரையில் உலவ விடபடுகின்றன. பத்து / பதினைந்து  வருடங்களுக்கு முன்னால், படங்களில் இது போன்ற வசனங்கள் அவ்வளவாக வந்ததில்லை. அப்படியே வந்தாலும் ஒன்று, இரண்டு என மூன்றாம் தர படங்களில் மட்டுமே வரும்.

இந்த பதிவு வேறு யாரையோ பற்றி சொல்வது போல இருந்தாலும், நம்மில் பலருக்கு இந்த கெட்டப்பழக்கம் உண்டு. கொஞ்சம் வெட்கி தலைகுனியும் செயலாக இருந்தாலும்; மறுக்க முடியாத ஒன்று. 

பெரும்பாலும் கெட்ட வார்த்தைகள் பெண்களை இழிவு செய்வது போலவும், மனித உடல் பாகத்தினை குறிக்கும்படி தான் இருக்கிறது. அவன் தாயை, தமக்கையை, மனைவியை கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்க்கபடுகிறது.

தகாத வார்த்தைகளை உபயோகிப்பவன், திட்டு வாங்குபவர் மன நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  நாட்டில் உலவும் பாலியல் வறட்சியின் காரணமாக தான் இது போன்ற கெட்ட வார்த்தைகள் வாயிலிருந்து வந்து விழுகின்றது என ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

நம் பாரத தாய் திருநாடு பெண்களின் பெருமை பேசும் ஒரு தேசம். நாம் பெண்களின் பெருமையையும், அடிப்படை மனித மரியாதையையும் போற்றி பாதுகாக்காவிட்டலும் பரவில்லை; குறைந்தது மதிக்கவாவது கற்று கொள்ள வேண்டும்.

பின் குறிப்பு: இப்பதிவு நண்பர் ராஜ்மோகனின்  "ரேடியோ மோகன்"  வலைப்பூவில் ஏச்சு வார்த்தைகள்   பதிவை  தழுவி எழுதப்பட்டது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே !!!

வணக்கம்,

இன்றைய யுவன்/ யுவதிகளுக்கு இந்நவீன தொழில்நுட்ப உலகத்தில் கணினி, கைப்பேசி, இணையமும் (Computer, Mobile & Internet) இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்ற நிலை வந்துவிட்டது. திருவிளையாடல் படத்தில் " நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ! " என்று பாடிவிட்டு நடிகர் திலகம் ஒரு கணம் திரையில் அசையாமல் இருப்பார். அந்த கணம் உலகமே நின்றுவிடுவது போல காண்பிக்கப்படும். அதுபோல தான், இவை மூன்றும் இல்லாவிடில் நம் மக்கள் உலகமே நின்று விடுவது போல உணர்வார்கள்.

ஆதி முதல் அந்தம் வரை காசு, பணம், துட்டு, மனி என்பது போல, இவை அனைத்துக்கும் நாம் அன்றாட வாழ்வில் கணினியும், இணையமும் ஒன்றாகி விட்டது. கிட்ட தட்ட நம்முடைய எல்லா வேலைக்கும் இணையத்தின் (internet) உதவியை நாம் உபயோகபடுத்துகிறோம்.

முன்பெல்லாம் குழந்தை பிறந்ததும், என்ன பெயர் வைக்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தை தான் பார்ப்பார்கள். இப்போதோ, பிறந்த தேதியும், நட்சத்திரமும் வலைதளங்களில் கொடுத்து, இன்டர்நெட்டில் பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள். அலுவலககளில் சில பழைய முக்கிய தகவல்களை இணையத்தில் சேமித்து வைத்து கொண்டு ஒரு நொடி பொழுதில் மீட்டெடுத்து விடுகின்றனர்.

" பிறப்பு / இறப்பு சான்று பெற ,
அரசு அடையாள அட்டை எடுக்க,
பள்ளிகூட /கல்லூரி சேர்க்கைக்கு,
கல்லூரி கட்டணம் செலுத்த,
உறவினர்/ நண்பர்களுடன் அரட்டை அடிக்க,
தகவல் / செய்திகளை பரிமாறிக்கொள்ள,
பிறந்த நாள்/ விசேஷ நாளில் வாழ்த்து அட்டை அனுப்ப,
மின்னஞ்சல் பெற/அனுப்ப,
கைபேசியில் / கணினியில் மென்பொருள் பதிவிறக்கம் செய்து பதிய, 
வெளியூர் செல்ல பயண சீட்டு முன்பதிவு செய்ய,
திரைப்பட சீட்டு முன்பதிவு , 
திரைப்படங்கள்/ பாடல்கள்  பதிவிறக்கம் செய்ய,
விளையாடி களிக்க, 
செய்திகள்/கட்டுரைகள் படிக்க/வெளியட,
சமையல் குறிப்பு/ கதைகள் படிக்க,
சமூக வலைமனைகளில் தகவல் பகிர,
வேலை தேட,
பணி சம்பந்தமான சந்தேககளுக்கு உதவ,
வியாபாரத்தை/ பொருளை விளம்பரம் செய்ய,
பெண் தேட -பேசி/பழக மற்றும் திருமணத்திற்கு,
விடு/மனை/வாகனம் - வாங்க,விற்க,
வீட்டு பொருட்கள் /மற்றவை வாங்க அல்லது  விலை விசாரிக்க,
நல்ல நேரம் பார்க்க,
குழந்தைக்கு/ செல்ல பிராணிக்கு பெயர் வைக்க,
வானிலை அறிக்கை அறிந்து கொள்ள,
புதிதாக செல்லும் இடங்களுக்கு வழி சொல்ல,
புதிய இடம் பற்றி தெரிந்து கொள்ள ,
தெரியாத விஷயங்களை அறிய,
உங்கள் கருத்தை வெளிப்படையாய் பொது இடத்தில் சொல்ல... "
 
இன்னும் பல பல தகவல்களுக்காக நாம் இணையத்தை
உபயோகப்படுத்துகிறோம். சில சமயங்களில், இது தவறான வழியிலும் செயல்படுத்தப்படுகிறது என்பது தான் வருத்தமான விஷயம். பெண்களை தவறாக புகைப்படம் / காணொளி எடுத்து இணையத்தில் விடுவது, சமூக வலைதளங்களில் பெண்களின் பெயரில் போலி சுயவிவரம் கொண்டு ஏமாற்றுவது, மற்றவர் வங்கி கணக்குகளை ஏமாற்றி பணம் திருட,
திரைப்படங்களை  சட்டவிரோதமாக வலைதளங்களில் வெளியிட, உணர்ச்சிமிக்க சில வதந்திகளை பரப்ப என இந்த பட்டியலும் நீண்டு கொண்டு தான் போகிறது...

உலகம் முழுக்க நாம் பலரும் இணையத்தில் பயன்படுத்தும் ஒரு தேடல் தளம் கூகிள் (Google). யாகூ (Yahoo), பிங் (Bing)  போன்ற தேடல் தளங்கள் (Search Engine) பல இருந்தாலும், கூகிள் தான் முன்னணியில் நிற்கிறது. கூகிள் ஒரு நாள் வெளிநிறுத்தம் செய்தாலோ, அல்லது முக்கிய கணினி வலை சேவையகம் (Network Server) பழுதடைந்து போனாலோ, அவ்வளவு தான்! பல வணிக/ பெருநிறுவன அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது!!!

Google Search

கூகிள் - இணைய உலகின் ராஜா. இல்லை...இல்லை.... உலக மகா சக்ரவர்த்தி என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் கூகுளில் தேடுவது எதுவாயினும், நம்முன் வரிசை படுத்தி காட்டிவிடும்; சில சமயங்களில் தேவையில்லாததையும் சேர்த்து. நேற்று பேஸ்புக்கில்  கூகிள் தேடல் பற்றிய ஒரு காணொளி பார்த்தேன். அதை பார்த்த பின்பு தான் இந்த பதிவு எழுத வேண்டும் என தோன்றியது. சொல்ல போனால், அது  கூகுளின் விளம்பரத்திற்காக அவர்களால் வெளியிடப்பட்டது. ஆனால் நாம் எவ்வளவு தூரம் உபயோகப்படுத்துகிறோம் என்று இதை பார்த்தாலே புரியும். பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் தாத்தாவின் பால்ய சிநேகிதனை, பேத்தி  கூகிள் மூலம் தேடி அழைத்து வருகிறாள் என்பதே இந்த காணொளி.


இதிலேருந்து நமக்கு தெரிவது என்ன ? இணையம் போல எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் நாம் பயன்படுத்துவதில்தான் உள்ளது. நல்லதையே நினைத்து; நல்லதையே செய்வோம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

நாம் எதையெல்லாம் தொலைத்துள்ளோம் ?

வணக்கம்,

நமக்கு முந்தைய தலைமுறையில் நாமும், நம் முன்னோர்களும் அனுபவித்த பல சந்தோஷங்களை நாம் இப்போது அனுபவிப்பது இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், முன்னால் உபயோகபடுத்தியதை / பழகியதை நாம் நினைவில் கொள்வதில்லை.
இன்றைய அறிவியலின் அதீத வளர்ச்சியால், நாம் கடந்த நூற்றாண்டில் செய்த பல நல்ல விஷயங்களை தொலைத்துள்ளோம்.

முதலில் வருவது, தொலைப்பேசியும், கைப்பேசியும் தான். இவை இரண்டும் வருவதற்கு முன்னால், நம் தகவல்தொடர்பு, கடிதத்தின் மூலமாக தான் இருந்தது. தொலைப்பேசியின் வரவால், கடிதம் எழுதுவதே இல்லாமல் போய் விட்டது. இப்போதெல்லாம், பள்ளிகூடங்களில் ஒன்றாம்/ இரண்டாம்  வகுப்பில் 'விடுப்பு கடிதம்' எழுதுவதோடு சரி. இன்று ஒரு கல்லூரி மாணவரையோயோ / நல்ல வேலையில்  இருக்கும் யாரையாவது ஒருவரை கடிதம் எழுதுங்கள் என்று சொன்னால் "As I'm suffering from fever, I'm unable to attend.. " என்ற வழக்கமான template-ஐ தான் பெரும்பாலானோர் எழுதுவார்கள். இதை பற்றியே பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சொல்லிவிட்டார்கள்.


தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவினரிடமோ, நண்பர்களிடமோ தொலைபேசியில் பேசி/நலம் விசாரித்து கொண்டு இருப்பதை விட, மாதம் ஒரு முறைகடிதத்தில் பரஸ்பரம் பரிமாரிக் கொள்வது மிகவும் சுகமானது. அதில் ஒரு வித அன்பும், பொறுமையும் இருக்கும். கடிதம் எழுதி பழகியே தமிழில் தேர்ச்சி பெற்றவரும் உண்டு. அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள், மகாத்மா காந்தியின் கடிதங்கள், முன்னால் அமெரிக்க அதிபர் சர்ச்சில் கடிதங்கள்  என கடிதங்களுக்கு சில சிறப்பு மிக்க வரலாறும் உண்டு.

முன்னதாக தொலைப்பேசி இருக்கும் போது, எல்லாருடைய பையிலும் நண்பர்கள், உறவினர்களின், முக்கிய தொலைபேசி எண்கள் என ஒரு சிறு டயரியில் எழுதி வைத்திருப்பார்கள். பின்னர் கால்குலேடருடன்   கூடிய டிஜிட்டல்  டயரியில் சேமித்து வைத்திருந்தனர். அடிக்கடி அழைக்கும் நபர்களின் எண்களை மனப்பாடமாக சொல்வார்கள். ஆனால் இப்போது,  ஒரே வீட்டில் இருப்பவர்கள் எண்கள் கூட தெரிவதில்லை. "உங்க அப்பா மொபைல் நம்பர்  என்ன?"   என்று கேட்டால், அவர்களுடைய மொபைல் போனை பார்த்து தான் சொல்கிறார்கள்.

பண்டிகை நாள்களிலும், பிறந்த நாள்களிலும் வாழ்த்து அட்டை அனுப்புவது ஒரு சிலரின் பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில், அதெல்லாம் Out of Fashion ஆகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திகளிலும் தான் வாழ்த்துகள் பரிமாறி கொள்ள படுகிறது. இப்போது வாழ்த்து அட்டை கடைகளில் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை திருநாள் வாழ்த்து அட்டைகளை விட வித விதமான காதலர் தின அட்டைகள் தான் இருக்கின்றது, விற்கின்றது !

சரி ! அதை விடுங்கள். அடுத்த விஷயத்துக்கு வருவோம். சின்ன வயதில் பசங்களுக்கு ஒழுக்கமும், படிப்பும், விளையாட்டும் தான் முக்கியம். பாரதியாரே "ஓடி விளையாடு பாப்பா " என்று தான் பாடியிருக்கிறார். முன்பெல்லாம், சிறுவர்/சிறுமியர் ஓடி பிடித்து, வியர்க்க விருவிருக்க விளையாடுவார்கள். ஏனென்றால் அப்போது, தொலைக்காட்சி கிடையாது. பக்கம் பக்கமாக வீட்டுப்பாடம் எழுதவேண்டிய அவசியமெல்லாம் இருந்ததில்லை. விளையாடி விளையாடியே  கலைத்து போய் விடுவார்கள். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் கூட இருக்கலாம்; மண்ணில் புரண்டு விழுந்து விளையாடாதவர்களே இல்லை எனலாம். அப்படி விளையாடுவதால், மற்ற குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும், ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

சில காலம் முன்பு வரை, பிள்ளைகள் அப்படி தான் விளையாடி பொழுதை களித்தனர். தொலைகாட்சி சேனல்களின் வரவுக்கு பிறகு, அதுவும் Cartoon Network, POGO வில் உள்ள பொம்மை படங்களுடன் தான் இப்போது பிள்ளைகள் பொழுதை களிகின்றனர். பிறகு கம்ப்யூட்டர் வந்த பிறகு, பிள்ளைகள் வீடியோ கேம்ஸ், ப்பிளே ஸ்டேஷன் என முழ்கி விட்டனர். இப்போதெல்லாம் 2 வயது குழந்தை முதல், டச் ஸ்க்ரீன் போனில் தான் விளையாடுகின்றனர். இன்றும் கபடி, கிரிகெட் போன்ற விளையாட்டுகள் விளையாடபடுகின்றன. பெரும்பாலும், PS-2 விலும், மொபைல் கேம்களிலும்.

இந்த மாற்றங்கள் எல்லாமே மறுக்க முடியாத ஒன்று. இவை விஞ்ஞானம் மற்றும் கணினித்துறையின் அசூர வளர்ச்சியால் கண்ட மாற்றங்கள். இதனால் நாம் கடத்த காலத்தில் உள்ள பல விஷயங்களை தொலைத்துள்ளோம். இன்னும் நாம் எத்தனை சின்னசின்ன  சந்தோஷங்களை தொலைக்க போகிறோம் என தெரியவில்லை.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 26 அக்டோபர், 2013

சமூக குற்றவாளிகள் !!!

வணக்கம்,

சென்ற வாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு துயர் செய்தி, தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் மூவர் தலைமை ஆசிரியரை வெட்டி கொன்றதுதான். இப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள்தான், செய்தித்தாள்களையும் மற்ற செய்தி ஊடகங்களையும் அலங்கரிக்கின்றன.

சமீப காலமாக நம் நாட்டில் சிறார் மற்றும் இளம் குற்றவாளிகள் அதிகமாகியுள்ளார்கள். இது போன்ற குற்றங்களுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று அலசினால், அனைத்து  குற்றங்களுக்கும் சமூகமே முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலோட்டமாக பார்த்தால் தவறு மாணவர்களின் / பிள்ளைகளின் மீது தான் இருக்க கூடும்  என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் நடக்கிற / நடக்கின்ற குற்றங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அதில் சமூக பிரச்சனை ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த சமூகமே ஒரு குற்றவாளியாக இருப்பது நமக்கு விளங்கும். சமூதாயம் என்பது வேறு யாரோ அல்ல. நான், நீங்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள்தான். நான் பார்த்து , படித்து தெரிந்து கொண்ட சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்கள் / கல்லூரி மாணவர்கள் ஆசிரியரை குத்தி கொல்வது, படிக்கிற வயதில் மது அருந்துதல், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொள்ளுதல், வீட்டை விட்டு ஓடுதல் என தினமும் நாம் செய்திகளில் படித்து கொண்டு தான் இருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வடபழனியில், ஒரு தனியார் பள்ளியில், பெண் ஆசிரியையை பள்ளி வளாகத்தில், பாத்ரூமில் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்க நிலையில் கிடந்தார். ஆசிரியை போடப்பட்ட நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரித்ததில் அதே பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தான் காரணம் என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியையிடம் நகைகளை பிடுங்கும் போது அந்த மாணவி சொன்னது,"எங்க அக்கா நகை இல்லாமல் வாழாவெட்டியா இருக்கா? உனக்கு ஏதுக்குடி நகை? "என அடித்து பிடுங்கி இருக்கிறாள்.

இந்த செய்தி மாநகர் முழுவது பரவி, செய்தி ஊடகங்களுக்கு நல்ல விருந்தானது. ஒன்பதாம் வகுப்பு மாணவி கொள்ளைக்காரியாக மாறியது மாற்றியது, அவளது அக்காவை வாழாவெட்டியாக அனுப்பியவர்கள் தான்.


ஒரு பத்து வயது பள்ளி மாணவனை, ஒரு ஆசிரியர்  " நீ மட்டும் இந்த தடவை பாஸ் ஆகலைனா, உன் தோலை உரிச்சி தொங்க விட்டுருவேன்.. ஒரு நாள் முழுக்க கிரௌண்ட் -ல முட்டி போடணும்... " இப்படி மிரட்டினால், கண்டிப்பாக அந்த மாணவன், பயத்தினால் பரீட்சை பேப்பர் கொடுக்கும் நாளன்று வீட்டை விட்டு ஓடி தான் போவான். ஏனென்றால் அந்த பத்து வயது பையனுக்கு வீட்டை விட்டு ஓடுவது என்றால் என்ன என்று தெரியாது. அதன் பிறகு நாம் என்ன செய்வோம் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். இதில் தப்பு வாத்தியாருடையதே! 

இது போன்ற ஒரு காரணமாகதான் தூத்துக்குடி கொலையும் இருக்கும் (என் அனுமானம் தான் .) அதனால் மாணவர்கள் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்தது ஒரு அதிர்ச்சிகரமான, அபாயகரமான செயல்தான். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனாலும் அந்த கொலைக்கு தூண்டுதலாக, பின்னணியில்  மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு சமூக பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

பள்ளி / கல்லூரி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் / புகைபிடிகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள். தப்பு தான். தெருவுக்கு தெரு மது கடைகளும், பெட்டி கடையில் புகை, பாக்கு போன்ற போதை வஸ்துகளும்  இருக்கும் போது, அதுவும் மதுக்கடையை அரசே ஏற்று நடத்தும் போது அவர்கள் எப்படி குடிக்காமல், புகைக்காமல் இருப்பார்கள் ? பார்க்கும் முக்கால்வாசி திரைப்படங்களில் குடியையும், புகையையும் காட்டும் போது பதின்பருவ வயது கெட்டு போகதான் சொல்லும்.

வசதி படைத்த பெற்றோர் சிலர், தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியாக அதிகம் பணம் கொடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ளட்டும் என்று படிக்கிற பசங்களுக்கு சில நூறு ரூபாய்களை  கொடுப்பது, பிள்ளைகள் வாழ்க்கையை பெற்றோர்களே கெடுப்பது போல தான்.

அதே போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு எதற்கு செல்போன்? அதுவும் பத்தாயிரம், பதினைந்தாயிரத்தில்.. காசு இருக்கிறதே என பிள்ளைகளுக்கு செலவு செய்வது தவறில்லை. ஆனால் படிக்கிற வயதில் இது தேவையா?? என்று  தான் நாம் பார்க்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி இருந்தால், அவர்கள் ஒரு நிலைக்கு மேல் தவறான வழிக்குதான் போவார்கள்.

இன்னொரு கூத்து இது. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை தனியார் பள்ளிகளும், பெற்றோர்களும் கசக்கி, பிழிந்து அவர்களை தேர்வில் அதிக மதிப்பெண் பெற பாடாய் படுத்துகிறார்கள். அவர்களும் படித்துவிட்டு நல்ல மதிப்பெண் வரவில்லை என்றாலோ, தேர்வில் தோல்வி அடைந்தாலோ தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை   என்ற பதிவில் எழுதியிருந்தேன்.

இவர்கள் மட்டுமல்ல. இவர்களை போல வளரும் பதின்பருவ வயதுடைய பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல நட்பும், தன்னம்பிக்கை வளர்த்தல், கலந்தாய்வு தான் அவசியம் தேவை.

கலந்தாய்வுக்கு மருத்துவரை தான் பார்க்க வேண்டும் என்றில்லை. பெற்றோரோ அல்லது ஆசிரியரோ அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். நண்பர்களை போல நடத்த வேண்டும். அந்த வயதில் கிடைக்க வேண்டிய நட்பு, பாசம், ஏக்கம், மகிழ்ச்சி கிடைக்காவிடில் அவர்கள் தவறான பாதையில் தான் தள்ளபடுவார்கள். 

பெற்றவரும், மற்றவரும் பதின்பருவ மாணவர்களுக்கு அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். அதெல்லாம் அவர்கள் காதில் ஏறாது. குழந்தை பருவத்தில், அவர்கள் ஏன் அழுகிறார்கள், ஏன் அடம் பிடிக்கிறார்கள் என பெற்றோர்கள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால், இந்த இரண்டும்கெட்டான் வயது பிள்ளைகளிடம் ஏற்படும்  மாற்றங்களை அவர்கள் சொன்னாலோழிய யாரும் கண்டுபிடிக்க முடியாது.

பதினொன்று முதல் பத்தொன்பது வயது வரை பதின்பருவ வயதில் பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர்களுக்கு ஏட்டு கல்வி மட்டுமே போதித்தல் போதாது. அவர்களை திட்டியோ, மிரட்டியோ,அல்லது அடித்து  பணிய வைப்பது அவர்கள மேலும் காயப்படுத்தும். "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்"; "அடிபடாத மாடு படியாது"; "பிள்ளைகளை அடித்து வளர்த்தல் தான் நல்வழி படுத்த முடியும்" என்று பழமொழிகள் இருந்தாலும், அதை நானும் ஒத்து கொள்கிறேன். பிள்ளைகளை திருத்த கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம் தான். கண்டிப்பு ஓரளவு தான் இருக்க வேண்டும். மீறினால் ஆபத்து தான். அவர்களை நல்வழிபடுத்த அவ்வபோது உளவியல் கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஒரு நல்ல கலந்தாய்வும், பெற்றோர்-பிள்ளைகளின் ஆரோக்கியமான உரையாடல்களும், பிள்ளைகளை மனதளவில் புரிதல் மட்டுமே ஒரு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

தவறவிட்ட தருணங்கள் !!!

வணக்கம்,

முதல் வேலை. முதல் சம்பாத்தியம். அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்று. எனக்கும் தான். என்னதான் இப்போது நல்ல வேலையில் இருந்தாலும், நமக்கு கிடைத்த முதல் வேலையை யாராலும் மறக்க முடியாது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் 'ராஜா ராணி ' படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அதில் வந்த கால் சென்டர் (Call Center)  சம்பந்தப்பட்ட காட்சிகளை  பார்க்கும் போது நான் டாடா டோகோமோ கஸ்டமர் கேரில் (TATA DOCOMO Customer Care) வேலை செய்தது நினைவில் வந்தது. பணியின் போது நடந்த சில சுவாரசியமான சில நிகழ்வுகளை உங்களிடம் பகிர்கிறேன். கொஞ்சம் பெரிய பதிவாகவே இருப்பதால், பொறுமையாக படிக்கவும்.

ஏற்கனவே 2009-2010-லேயே பிலாசபி பிரபாகரன் கால் சென்டர் அனுபவம் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட்டுவிட்டார். நானும் பிரபாவும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் வேலை செய்துள்ளதால், அவர் அரைத்த மாவையே நானும் அரைக்க வேண்டாம் என எண்ணி, அவர் தவற விட்ட தருணங்களின் தொகுப்பை உங்களிடம் பதியவிருக்கிறேன்.

சரி, இப்போது கால் சென்டருக்குள் வருவோம்...

என் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் வேலை இல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து விட்டு, Allsec Technologies-ல்  வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக (Customer  Care Executive) வேலைக்கு சேர்ந்தேன். தமிழ் நாட்டில் டாடா டோகோமோ வாடிக்கையாளர்கள் 121 (டோல் ப்ரீ-விட்டு விட்டால்  FE ) எண்ணை டோகோமோ சேவைக்காக அழைத்தால், நாங்கள் தான் எடுப்போம். என்னை போலவே ஏறக்குறைய 250 முதல் 400 ஆபிசர்கள் சேவை அழைப்பில் வேலை செய்வார்கள்.


Call Center- கோப்பு படம்
பெரும்பாலும் கால் சென்டரில் வேலை செய்பவரென்றால் 20 முதல் 30 ஆயிரங்களில் சம்பளம் வாங்குவார் என்றும், காதில் ஹெட் போன் 
(head phone) வைத்து கொண்டு வெள்ளைக்கார வாடிக்கையாளரிடம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி கொண்டு, விடுமுறை நாட்களில் பப், பார், என கூத்தாடுபவர்கள் என்றும், இரவு நேர வேலை மட்டுமே பார்பவர்கள் என்றும்   நினைக்கும் சமூகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம்.

மேற்கண்டவை எல்லாம் சில சர்வதேச அழைப்பை
(International Calls) எடுக்கும்/ பேசும்
சேவை மைய அதிகாரிக்கு தான் பொருந்தும். உள்ளூர் அழைப்பில் (Domestic Calls) பேசும் அதிகாரிக்கு சுத்தமாக சேராது.

மேலும் என்னை போன்ற டொமெஸ்டிக் கஸ்டமர் கேரில் வேலை செய்யும்/ செய்த
சேவை மைய அதிகாரிகள், முதல் மாத சம்பளமே ரூ. 6000/ தான் வாங்குவார்கள். முக்கால்வாசி பேர் வெளியூரில் இருந்து வந்து வேலை செய்பவர்கள். இங்கு பணிபுரியும் மார்டன் பெண்கள் சிலர் கார்மென்ட் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்களை போல புடவையும்/ சுடிதாரும் மட்டுமே அணிந்து வருவார்கள்.

கம்பெனியில் சேர்ந்தவுடன் ட்ரைனிங்-ல் (Training) முதலில் சொல்லி தருவது, "இங்கு யாரையும் சார் என்று கூப்பிட வேண்டாம்; பெயர் சொல்லி அழைத்தாலே போதும்" என்பதுதான். 20 நாள் ட்ரைனிங் நன்றாக முடிந்து, எங்களது சேவை பணியை ஆரம்பித்தோம். நானும் சராசரியாக 16 மாதங்களில் 1 லட்சம் கால்களுக்கு மேல் எடுத்துருப்பேன். "இவனுங்களுக்கு எங்கேருந்து தான் வருமோ இந்த மாதிரி சந்தேகமெல்லாம்???? " என்றும் என்னும் அளவுக்கு கடுப்பகிவிடும். சில நேரங்களில் கஸ்டமர் தெரிந்து பேசுகிறானா? இல்லை புரியாமல் உளறுகிறானா? அல்லது நாம் தான் தப்பாக  சொல்கிறோமா? என்று கூட  நமக்கே சந்தேகம் வந்துவிடும்.


அதில் சில விஷமிகள் வேண்டுமென்றே போன் செய்து கலாய்த்து விட்டு போவார்கள். இன்னும் சிலர் அவர்கள் குறை தீராததால் புரிந்தும்
புரியாமலும் கன்னா- பின்னா என  கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு போவர்கள். கஸ்டமர் கேர் வரும் கால்களில் 30% கால்கள் இது போன்ற கால்கள் மட்டுமே!

அதுவும் குறிப்பாக சனி,ஞாயிறுகளிலும், டிசம்பர் 31 இரவிலும், முழு நாள் மின் வெட்டின் போதும், பண்டிகை தேதிகளிலும், கால்கள் எக்கச்சக்கமாக வரும். டிசம்பர் 31-ல் முழு இரவும் விடிய விடிய வாடிக்கையாளரிடம் பேசி சந்தேகத்தை தீர்த்து வைத்ததுண்டு.


"என் அக்கௌன்ட்-ல் (account) 0.55 பைசாவை பிடித்து விட்டர்கள் ! இப்போதே கொடுக்க வேண்டும்" என்று முக்கால் மணிநேரமாக திட்டி அடம் பிடித்து, பின்னர் ஹோல்ட்-லேயே (Hold) வைக்கப்பட்டு காணாமல் போன வாடிக்கையாளர்களும் உண்டு. (முடிந்தால் கொடுக்க மாட்டோமா??) 


புதிதாக வேலை செய்பவர்களுக்கு இந்த ஹோல்ட் மற்றும் ஆக்ஸ் (Aux  - Stopping calls)  இல்லையென்றால் அவ்வளவு தான்.. வாடிக்கையாளரின் கேட்கும் கேள்விகள், அருகில் இருபவரிடம் சந்தேகங்களை  நிவர்த்தி செய்தல், சற்று நேரம் ஆசுவாச படுத்தி கொள்ளுதல் என பல வசதிகள் உண்டு.  

கால் சென்டரில் வேலை செய்த போது (எங்களுக்கும்) எனக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நடந்த சில நகைச்சுவை உரையாடல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


****************************உரையாடல் 1*************************************

வாடிக்கையாளர்: சார்! நான் மதுரை மாவட்டம், தல்லாகுளத்திலிருந்து பேசுறேன்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன தகவல் வேணும்?


வாடிக்கையாளர்: பஸ் ஸ்டாப்லிருந்து வீட்டுக்கு சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது, டயர் பன்சர் ஆயிடிச்சி..நீங்க பன்சர்  போடா இங்க ஆள் அனுப்ப முடியுமா?????  

  
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்.. அது  மாதிரி எல்லம் எங்களால செய்ய முடியாது..  டாடா டோகோமோ பற்றி கேளுங்க சார்.


வாடிக்கையாளர்: அதெல்லாம்  வேண்டாம்...பன்சர் போட ஆள் அனுப்பு. இல்லாட்டி நீ வந்து பன்சர் போடு...


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???!?!? 

**********************************உரையாடல் 2*******************************

வாடிக்கையாளர்:சார்.. நான் மலர்விழி பேசுறேன். என் நம்பருக்கு PIN (PUK) நம்பர் வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே மேடம். கண்டிப்பாக சொல்றேன். உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..

வாடிக்கையாளர்: 9600...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: உங்களுக்கு எந்த நம்பருக்கு (PUK) நம்பர்  வேணுமோ அந்த நம்பரை  சொல்லுங்க மேடம்..


வாடிக்கையாளர்: இந்த நம்பர் தான்.. 9600453..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இது டோகோமோ நம்பர் இல்லையே..

வாடிக்கையாளர்: ஆமாம்..என் Airtel  நம்பருக்கு தான் (PUK) நம்பர் வேணும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: அதுக்கு ஏன் எங்களுக்கு கால் பண்ணீங்க  மேடம் ???

வாடிக்கையாளர்: என் Airtel நம்பருக்கு தான் PUK நம்பர் வேண்டும்.. அது தான் லாக் ஆயிடிச்சி.. அதுனாலதான் டோகோமோ  நம்பரிலிருந்து 121 கால் பண்ணேன்..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????    


**********************************உரையாடல் 3*******************************

வாடிக்கையாளர்: சார் .. உங்க டோகோமோ SIM ல டைம் கரெக்டா காட்ட மாட்டேன்கிது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே சார் கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்... உங்க பிரச்சனை என்னனு சொல்லுங்க சார்..

வாடிக்கையாளர்: உங்க டோகோமோ சிம்மை என் செல்போனில் போட்டால் மொபைலில் டைம் தப்பா காட்டுது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்..அது மாதிரியெல்லாம் இருக்காது...உங்க மொபைல் ப்ரோப்ளமாக இருக்கலாம்...

வாடிக்கையாளர்: யோவ்...எனக்கு தெரியாதா... உங்க சிம் போட்டால் தான் பிரச்சனை...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????


**********************************உரையாடல் 4*******************************
 
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: வணக்கம் உங்கள் சேவைக்காக விமல்!!!

வாடிக்கையாளர்: சார்.. மேரா நாம் சஞ்ஜெய் பிஸ்வாஸ்.. மேரா மொபைல் மே காலர் ட்யூன் கேள்...     

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சாரி சார்..எனக்கு ஹிந்தி தெரியாது...முஜே ஹிந்தி நெய் மாலும்.. ஆப் 121 மே கால் கரோ; அவுர்  3 தபாயா ;  அவுர்  2 தபாயா ; Thank You சார்..

(தடம் மாறி வந்த ஹிந்தி வாடிக்கையாளர்களுக்கு பிரத்யோகமாக உபயோகபடுத்தும்  உரை(script) )

வாடிக்கையாளர்: நெய் சார்..என்னக்கு தமில் தெரியும்..  நீங்கோ பேசுஙொ சாப்..  

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???.. (கடுப்பாகி ) சாரி சார்.. உங்க side la proper response இல்லாததால் இந்த கால் disconnect செய்யபடுகிறது.. டாடா  டோகோமோ அழைத்ததற்கு நன்றி..


வாடிக்கையாளர்: சார்.. சார்.. சார்.. 

**********************************உரையாடல் 5*******************************
  
வாடிக்கையாளர்: சார் !! என் account-ல amount குறைஞ்சு போச்சு...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்...கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்...  நான் செக் பண்ணி சொல்றேன்... ...நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட்-ல browsing பண்ணியிருக்கீங்க.. அதான் இருபது ரூபாய் எடுத்துட்டாங்க..

வாடிக்கையாளர்: நான் use பண்றது நோக்கியா 1200. அதில எப்படி சார்
browsing???

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இல்லை சார். நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட் -ல browsing பண்ணியிருக்கீங்க -ன்னு தான் காட்டுது..

வாடிக்கையாளர்: நோக்கியா 1200-ல் எப்படி சார் முடியும்????


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சிம் வேற போன்-ல கூட போட்டு browse பண்ணலாம் சார்..

வாடிக்கையாளர்: என் கிட்ட வேற போன் கிடையாது  சார்...போன்- சுத்தி டேப் ஒட்டி இருக்கு.. இதுல போய் எப்படிங்க  முடியம்..

(20 நிமிட உரையாடலுக்கு பின் )


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சார் நான் செக் பண்ணி பார்த்ததுல நீங்க SAMSUNG GT-S3850-ல browse  பண்ணதா காட்டுது...

வாடிக்கையாளர்: சரி..SAMSUNG CORBY ல
browse பண்ணேன்னு சொல்றீங்களா??? ஓகே... (கால் கட்டாகி விட்டது ).....

*****************************************************************
 
 
இந்த மாதிரி கஸ்டமர்கள் இருந்தால் எல்லா அதிகாரிகளும் "ராஜா ராணி" படத்தில் வரும் ஜெய் போல அழ வேண்டியது தான்... படிக்கும் போது சில உரையாடல்கள் மொக்கையாக இருந்தாலும், அந்த நேரத்தில் சிரிப்பும், எரிச்சலும் தான் நமக்கு வரும்.


உடன் வேலை செய்பவர்கள் / நண்பர்கள் - ஆறு மாதத்தில் பல தர பட்ட மனிதர்களை நீங்கள் இங்கு பார்க்கலாம். ஹிந்தி பேசும் வாடிக்கையாளர்களிடம் பேசும்  ஹிந்தி அதிகாரிகள், மாறுப்பட்ட டீம் லீடர்கள்/ முறுக்கி கொள்ளும் மேனேஜர்கள், எல்லாம் தெரிந்தது போல காட்டி கொள்ளும் சில சீனியர் அதிகாரிகள் என பலதரப்பட்ட மக்கள்  உண்டு. அவ்வப்போது குவாலிட்டி அனலிஸ்ட்களின் (QA) அலும்பல்கள் வேறு. 

ஆனால் இந்த மாதம் நமக்கு அருகில் உட்கார்ந்து அழைப்பு எடுத்தவன் (வேலை செய்தவன்), அடுத்த மாதம் இருக்க மாட்டான். சம்பளம் வாங்கியவுடன் சொல்லாமல் ஓடிவிடும் பழக்கம் சில கால் சென்டர்களில் இன்னும் உள்ளது.

அல்செக்-ல் பல நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்த போதும், சரியான தொடர்பு வைத்து கொள்ளாததால் ஒரு சிலர் தவிர யாரும் இப்போது தொடர்பில் இல்லை. இதில் ஒரே ஒரு நல்ல விஷயம். இவர்களில் பெரும்பாலானோர் இப்போது முகநூலில் நண்பர்களாக  இருக்கின்றனர்.    

இந்த பதிவை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்யும் போது, உங்களிடம் பேசும் கஸ்டமர் கேர் ஆபீசர்களிடம், உங்கள் வீண் ,வெட்டி ஜம்பத்தை காட்ட வேண்டாம். உங்கள் அக்கௌன்ட்-ல் பணம் குறைவது, புது சர்வீஸ்கள் ஆக்டிவேட் செய்வது, இவை பற்றியெல்லாம் சத்தியமாக அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இருப்பதை பார்த்து, படித்து சொல்பவர்தான் தான் அவர்கள். உங்கள் பணம் / சேவை வேண்டும்/ வேண்டாம் என்றாலோ நீங்கள் அவர்களிடம் கடிந்து கொள்ள வேண்டாம். பொறுமையாக பேசியோ/ மின்னஞ்சல் செய்தோ சரி செய்து கொள்ளலாம் .  

இப்போதும் கூட இதற்கு முன்னால் அல்செக்-ல் நான் இப்படி இருந்தேன்; அப்படி இருந்தேன்; என கூறி சக நண்பர்களிடம் பெருமைபடுவதும் உண்டு. சம்பளம் குறைவாக இருந்தாலும், நல்ல சுற்றுவட்டாரமும், நண்பர்களும் இருந்தால் யாரும் வேலையை விட மாட்டார்கள். சூழ்நிலை காரணமாக, அந்த வேலையைவிட்டு விட்டு, தற்போதுள்ள வேலைக்கு தாவி விட்டேன். மாறி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்றும் அந்த கால் சென்டர் வேலை, தவறவிட்ட தருணங்களாகவே என் மனதில் இருக்கின்றன.   



நன்றி !!!

-பி .விமல் ராஜ்