Monday, August 29, 2022

எக்ஸ்க்யுஸ் மீ! டைம் பிளீஸ்...

வணக்கம்,

நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் சரியாய் அட்டவணை போட்டு, முறைப்படுத்தி செய்வதற்கு நேரம் (Time) ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதன்படி தான் இந்த உலகம் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது.

ஒருவனுக்கு நல்லது நடந்தால் good time workout ஆகிறது என சொல்வார்கள்; கெட்டது நடந்தால் timeமே சரியில்லை என சொல்வார்கள். இந்த good time & bad time ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுவது போல, மணி நேரம் நாட்டுக்கு நாடு மாறுபடும். வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுக்கு போன் செய்து எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டு கடைசியாக, "இப்போ அங்கே மணி என்னப்பா??" என்று வழக்கமான கேள்வியை கேட்பார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள நேர வித்தியாசத்தை தான் time zone difference என்று சொல்கிறார்கள். அந்த time zone பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Time Zone - நாடுகளுக்கிடையே உள்ள நேர வித்தியாசம் தான் இந்த டைம் ஜோன். சாண்ட்ஃபோர்ட் ஃபிளேமிங் (SandFord Fleming) என்னும் ஸ்காட்லாந்து-கனடா நாட்டு ரயில்வே பொறியாளர் தான் முதன் முதலில் நாடுகளுக்கிடையே பயணத்தின் போது வரும் நேர குழப்பத்தை போக்க 24 hrs வழக்கத்தை கொண்டு வந்தார். பின்னர் பொதுவான நேரத்தை அளவீடு செய்ய UTC (Coordinated Universal Time) என்று ஒன்றை கண்டுபிடித்து நிறுவினார். உலக வரைபடத்தை 24 பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகமும் ஒரு மணி நேரமாக பிரித்தார். நடு பாகத்தில் உள்ள கிரீன்விச் என்னும் நகரை மையமாய் வைத்து Greenwich Mean Time - GMT என்று வைத்தனர். கிரீன்விச் நகரின் வலப்பக்கம் இருக்கும் பாகங்களை (நாடுகளில்) UTC+ என்றும், இடப்பக்கம் இருக்கும் பாகங்களை (நாடுகளில்) UTC - என்றும் வழங்கப்படுகிறது. இந்தியா +5 க்கும் +6 க்கும் இடையே வருவதால் நமக்கு UTC +0530 என்று வழங்கப்படுகிறது. இதை Indian Standard Time என்று சொல்லுகிறோம். இப்போதைக்கு இந்தியாவில் இந்த ஒரே (IST) time zone மட்டுமே நடைமுறையில் இருக்கிறது.

timezone
ஆனால் மற்ற நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட time zoneகள் உபயோகத்தில் உள்ளன. அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் 11 time zoneகளும், யுகேவில் 9 time zoneகளும், கனடாவில் 6 time zoneகளும், ஆஸ்திரேலியாவில் 3 time zoneகளும் இருக்கிறது. இந்நாடுகளின் பரப்பளவு தூரம் அதிகமாக இருப்பதால் (கிழக்கு-மேற்கு) பல time zoneகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த பூமி பந்தானது counter clockwise-ல் சுழலும் போது மேற்கு பக்க நாடுகளை விட கிழக்கு பக்க நாடுகளில் சூரியன் சீக்கிரம் உதித்து மறைந்து விடும். அதேபோல மேற்கு பக்க நாடுகளில் சூரியன் சற்று தாமதமாக உதித்து மறையும். இதனை சரிசெய்யவே ஒரே நாட்டில் பல time zoneகள் இருக்கிறது.

Day Light Saving - மேலும் சில நாடுகளில் குளிர்காலங்களில் கடிகாரத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கி வைத்து விடுவார்கள். மீண்டும் கோடை காலங்களில் நேரத்தை சரிசெய்து ஒரு மணி நேரம் முன்னோக்கி வைத்து விடுவார்கள். ஏனெனில் குளிர்காலங்களில் சூரிய வெளிச்சம் மிகவும் கம்மியான நேரத்திலேயே இருக்கும். அதிகபட்சம் 7/8 மணிநேரம் தான் வெளிச்சம் இருக்கும். ஆனால் கோடை காலத்தில் 13/14 வரை வெளிச்சம் இருக்கும். வேலை நேரம், பள்ளி கல்லூரி, வியாபாரம் என எல்லாமே பகல் வெளிச்சம் இருக்கும் போதே நடக்க, இது போன்று நேரத்தை சரி செய்து கொள்வார்கள். இதை தான் Day Light Saving என சொல்கிறார்கள். பொதுவாக இந்த Day Light Saving (DST), மார்ச்-ஏப்ரலில் ஆரம்பித்து அக்டோபர்-நவம்பரில் முடியும். எப்போது நேரத்தை முன்னோக்கி/பின்னோக்கி வைக்க வேண்டும் என்பதை சுலபமாய் நினைவில் வைத்து கொள்ள Spring forward, Fall back என்று சொல்வார்கள்.

DST முதன் முதலில் ஜெர்மனியில் ஏப்ரல் 16, 1916-ல் கடிகார நேரம் முன்னோக்கி வைக்கப்பட்டது. அதற்கு முன் கனடாவில் 1908-ல் Ontario வில் உள்ள Thunder bay என்னும் நகரில் செயல்படுத்தபட்டது. இப்போது 70 நாடுகளில் DST செயல்பாட்டில் உள்ளது.

இப்போது இந்தியாவின் time zone பிரச்சனைக்கு வருவோம். இந்தியாவின் பரப்பளவு மேற்கே குஜராத்திலிருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை கிட்டத்தட்ட 3000 கி.மீ இருக்கிறது.

இந்தியா முழுக்க சூரியோதயம் என்பது காலை 0600-0630 என ஆரம்பித்து, அஸ்தமனம் மாலை 0600-0630 என முடியும். ஆனால் நமது வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், சிக்கிம், மிஸ்சௌரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்தில் சூரியன் காலை 0430-0500 மணிக்குள்ளே உதயமாகி, மாலை 0430-0500 மணிக்குள் அஸ்தமனம் ஆகிவிடும். இந்திய முழுவதும் ஒரே time zone செயல்பாட்டில் உள்ளதாலும், அவர்களின் அலுவல் நேரம் 9-6 என்றே இருப்பதாலும் அப்பகுதி மக்கள் காலையில் 3 மணிநேரம் ஏதும் செய்யாமலும், மாலையில் 3 மணிநேரம் அதிகமாக விளக்கை பயன்படுத்தியும் தங்கள் வேலைகளை செய்து கொள்கிறார்கள். இதனால் இப்பகுதிகளில் மின்சாரம் அதிகமாக உபயோகபடுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் 2.7 பில்லியன் யூனிட் மின்சாரம் அதிகமாக பயன்படுத்துவதால் சராசரியாக 30,000 கோடி மேல் செலவாகிறது என ஓர் புள்ளி விவரம் சொல்கிறது.

sunrise-sunset-india

இந்த பிரச்சனைகளை சரி செய்ய CSIR - National Physical Laboratory, இந்தியாவிற்கு இரண்டு time zoneகள் (GMT +0530 & GMT +0630) வைத்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும் NIAS - National Institute of Advanced Science கூற்றின்படி ஒட்டு மொத்த இந்தியாவின் time zoneஐ GMT +0600 என மாற்றி கொண்டால் இப்பிரச்சனை சரியாகி பண விரயமும், நேர விரயமும் மிச்சமாகும் என சொல்கிறார்கள்.

ஏற்கனவே அசாமில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளிகள், தங்கள் கடிகாரத்தை ஒரு மணி நேரம் கூட்டி வைத்து கொண்டுதான் வேலை செய்கின்றனர். இதனால் அவர்கள் பகல் வெளிச்சத்தில் வேலை செய்ய அதிகம் நேரம் கிடைக்கிறது. அதனை chai bagaan (tea time) என்று சொல்கின்றனர். 

இவ்வாறு time zoneஐ இரண்டாய் பிரிப்பதாலும், மாற்றுவதாலும் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். ரயில்/விமான நேரங்களிலும், ரயில் டிராபிக்கிலும் பல சிக்கல்கள் இருக்கிறது. தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்றும் சொல்கின்றனர். இதை அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

Tuesday, July 26, 2022

ஐ .டி துறையில் நம்பபடும் கட்டுக்கதைகள்!

வணக்கம்,

ஒரு சில விஷயங்களை பலரும் இப்படி தான் இருக்கும், இப்படி தான் நடக்கும் என்று நினைத்து, அதுவே நிஜம் என நம்பி கொண்டிருப்பார்கள். உதாரணமாக அரசாங்க வேலை என்றால் வேலை செய்ய வேண்டுமென அவசியம் இல்லை; தமிழ் படித்தால் வேலை கிடைக்காது; என சில இருக்கிறது. அதில் ஒன்று தான் ஐ.டி வேலை பற்றிய விஷயங்கள்/கட்டு கதைகள். அதை பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்கிறேன்.

ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள் Comp.Sc/IT யில் குறைந்த பட்சம் பேச்சிலர் டிகிரியாவது பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி இல்லனா கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவன் தானே ஐ.டில வேலை செய்யணும்.?!? அப்படியெல்லாம் ஒரு அவசியமும் இல்லை. ECE, EEE, Mech, Civil, Biotechnology, Chemical, Viscom, Business Management, என ஐ.டிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் படித்தவர்களும் ஐ.டி துறையில் வேலை செய்கிறார்கள். On/Off campus -ல் செலக்ட் ஆன Freshers உள்ளே வந்து விடுகிறார்கள். மற்றவர்கள், கொஞ்சம் முன் அனுபவம் உள்ளவர்களோ ஏதேனும் ஒரு புதிய டெக்னாலஜி ஒன்றை படித்துவிட்டு ஐ.டியில் நுழைந்து விடுகின்றனர். பெரும்பாலும் கம்பெனிகளும் என்ன படித்துவிட்டு வருகிறார்கள் கண்டு கொள்வதில்லை.

myths-in-IT-jobs

டெலிவரி மேனேஜர்/ ப்ராஜெக்ட் மேனேஜர்கள் ஆக சம்பந்தப்பட்ட துறையில் Master டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சாதாரண BSc/BCA டிகிரியே சாப்டவேர் துறையில் நுழைய போதுமானது. சில கம்பெனிகளில் டிப்ளமா படித்தவர்களை கூட சேர்ந்து கொள்கிறார்கள். 10/15 வருட அனுபவத்திற்கு பிறகு உயர்பதவியில் போக சம்பந்தப்பட்ட துறையில் (domain-ல்) certification முடித்திருந்து, அதற்கான வேலை செய்யும்/வாங்கும் திறனும் இருந்தாலே போதும்.  

ஐ.டி வேலை செய்பவர்கள் எல்லாருமே எல்லாம் தெரிந்த அறிவாளியாக தான் இருப்பார்கள்.
சத்தியமாக இல்லை. client க்கு மெயில் டைப் செய்து விட்டு, இது சரியா இருக்கன்னு படிச்சு பாரேன் சொல்பவர்களும்; பத்தாம்/பன்னிரெண்டாம் படிக்கும் பிள்ளைகள் தெரிந்திருக்கும் லேப்டாப்/டெஸ்க்டாப் /சிஸ்டம் பற்றிய  சாதாரண விஷயத்தை கூட தெரிந்து வைத்திருக்காதவர்களும் ஐ.டியில் இருக்கதான் செய்கிறார்கள்.

ஐ.டியில் இருப்பவர்கள் அவர்கள் கம்பெனியில் மற்றவர்களுக்கு refer செய்தால் உதவி வேலை கிடைத்து விடும்.
நமக்கு தெரிஞ்ச பையனுக்கு எங்காவது ஐ .டில வேலை வாங்கி கொடுப்பா என நண்பர்கள்/சொந்தக்காரர்கள்/தெரிந்தவர்கள் என சொல்ல கேட்டிருப்பீர்கள். Refer பண்ண மெயில் / emp. portalலில் பதிவு செய்வதோடு ஐ.டி சாமான்யனின் வேலை முடிந்தது. அதிகபட்சம் ஓரிரு முறை HRக்கு நினைவூட்ட முடியும்.அவ்ளோதான! மற்றவையெல்லாம் HR process-ல் தான் உள்ளது. மற்றபடி சிறிய கம்பெனிகள், பெரிய பொறுப்பில் இருக்கும் மேனேஜர்கள் என ஒரு சிலரால் மட்டுமே referral வேலைக்கான வாக்குறுதியை தர முடியும்.      

ஐ.டி வேலையில் இருப்பவர்கள் எல்லாருமே சேர்ந்து சில வருடங்களிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள்.
மிக பெரிய கம்பெனியில் (Tier 1) வேலை புதிதாய் வேளையில் சேருபவர்களுக்கு பிடித்தம் போக அதிகபட்சம் 15,000 முதல் 20,000 தான் கிடைக்கும். Tier 2, Tier 3 கம்பெனிகளில் இன்னும் குறையும். Experience உள்ளவர்கள், முன்னாலில் வேலை செய்த கம்பெனியில் எவ்வளவு வாங்கினாரா அதை பொறுத்து தான் புது கம்பெனியில்  30%-40% வரை சம்பளம் உயர்த்தி தரப்படும். 

ஐ.டியில் இருப்பவர்கள் எல்லாருமே Onsite போவார்கள்.
எல்லாருக்கும் போக ஆசைதான். ஆனால் நடப்பது வேறு. Onsite என்பது அவரர் இருக்கிற project/domain பொறுத்தது. எந்த project-ல் வெளிநாடு சென்று வேலை செய்யும் நிர்பந்தம் வருகிறதோ /தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும் (எட்டா) கனி அது. நூற்றில் 20 பேருக்கு கிடைத்தால் இனிது.  

ஐ.டி வேலையில் இருப்பவர்கள் ஒரு டெக்னாலஜியில் படித்து அனுபவம் பெறுவதற்குள், அதை விட வேறு ஒரு சிறந்த டெக்னாலஜி வந்து விடும். மாறி மாறி படித்து கொண்டே இருக்க வேண்டும் .
முழுவதும் கதையல்ல..பாதி உண்மை.. இன்று வளர்ந்து வரும் ஐ.டி  துறையில் technology /language  பல வந்து கொண்டே தான் இருக்கும். நாளடைவில் அதன் அடுத்தடுத்த வெர்ஷன்களை அல்லது மாற்று மென்பொருளை கற்று கொண்டு இருக்க வேண்டும்.

ஐ.டியில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் 40/45 வயதுக்கு மேல் வேலை (நிரந்தரமாக) இருக்காது.
அப்படி இருக்க வாய்ப்பில்லை. 10 வருட அனுபவம் உள்ளவரின் வேலையை ஓரிரு வருட அனுபவம் உள்ளவர் செய்ய முடியாது. அதனால் அனுபவம் கூடும் போது அவர் பதவியும் பொறுப்பும் (சம்பளமும்) கூடி கொண்டே போகும். 

ஐ.டி வேலை நிரந்திரம் இல்லை. எப்பொது வேண்டுமானாலும் வேலை பறிபோக வாய்ப்புண்டு.
உலகமே digital technology, artificial intelligence, cloud computing, IOT என சுழன்று கொண்டிருக்கும் வேளையில், ஐ.டி துறை படுவேகமாக  வளர்்ந்து கொண்டே தான் இருக்கும். கொரோனா காலத்தில் கூட தடைபடாமல் ஓடி கொண்டே இருந்தது (வீட்டிலேயே!) ஐ.டி மக்கள் தான். சில சமயங்களில் recession காலங்களில் சில கம்பெனிகள் அடிவாங்கும். அது கூட தற்காலிகம் தான். மீண்டும் எழுந்து அதே போல வேகமாக முன்னேறி கொண்டே இருக்கும்.

இது போல வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


நன்றி!!!

பி.விமல் ராஜ்


Tuesday, June 28, 2022

யாருக்கான பெருமை இது ? : June Pride

வணக்கம்,

பொதுவாக நம் எல்லோருக்கும் இரு பாலினங்கள் இருக்கிறது என தெரியும். ஒன்று ஆண், இன்னொன்று பெண். சினிமா மூலமாகவும், ஏதாவது ஃபாரம் எழுதும் போதும் ஆண், பெண், திருநங்கை என மூன்றாம் பாலித்னதை பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த மூன்று பாலினத்தையும் தவிர 76 வகையான பாலின வகைகள் இருக்கிறது. அதற்கான மக்களும், அவர்களுக்கான ஆதரவும் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இவர்களை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த ஜூன் மாதத்தை Pride June என்று சொல்கிறார்கள். பல்வேறு நாடுகளில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். 1969 களில் மேற்கத்திய நாடுகளில் மாற்று பாலின மக்களுக்கும், அதே பாலினத்தின் மீது விருப்பு கொண்டவருக்கும்சில போராட்டங்களுக்கு பின்னர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இந்த ஜூன் மாதத்தில் LGBTQ/ LGBTQIA (Lesbian, Gay, Bisexual,Transgender, Queer, Intersex & Asexual) என்று சொல்லப்படும் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரின சேர்க்கையாளர்கள், ஈரின சேர்க்கையாளர்கள் என எல்லோரும் ஒன்று கூடி ஊர்வலம் போகிறார்கள். வானவில் நிறங்களில் கொடியேந்தி, முகத்தில் வண்ணம் பூசி ஊர்வலவாக சென்று கொண்டாடுகிறார்கள். 

LGBTQ flag-June pride

கடந்த 10/20 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த கேளிக்கை கொண்டாட்டங்கள், பாலின சேர்க்கை பற்றிய திரைப்படங்களும், விவாதங்களும், அதற்கான ஆதரவுகளும் வெளிநாடுகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் நாட்டிலும் இதற்கான குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

இரு நாட்களுக்கு முன் சென்னை, கோவை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், புது தில்லி, மும்பை என நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்ட ஊர்வலங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன் நம்மூரு மக்களுக்கு இந்த சமாச்சாரம் பற்றி பெரிதாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடஇந்தியாவில் சில பாலிவுட் படங்கள் மூலமாகவும் (Dostana, Girlfriend, Fire, Monsoon Wedding..), செய்திகளில் சில lesbian மற்றும் gay சம்பவங்களாலும் நமக்கு அறிமுகமாயின. தமிழிலும் ஆங்காங்கே சில படங்களில் இது போன்ற ஓரின சேர்க்கை பற்றி தொட்டும் தொடாமலும் வந்து சென்றது (பொம்மலாட்டம், கோவா, வேட்டையாடு விளையாடு...). மற்ற மொழிகளிலும் இந்த கதையமைப்பை கொண்ட படங்கள் வந்து கொண்டு தான் இருந்தன. ஆனால் இப்போதைய OTT காலத்தில், வெப் சீரிஸ்களிலும், படங்களிலும் நேரடியாக ஓரின சேர்க்கையை ஆதரித்தும், அந்த வாழ்க்கை சரியன்றும் சொல்லி படம் எடுத்துள்ளனர். அப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போனதும், பெரிதாய் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், இது போன்ற படங்கள் எதை ஊக்குவிக்கின்றன என தெரியவில்லை. இதை பார்த்து வருங்காலம் கெட்டுவிடும் என்றோ, கலாசாரம் சீர்கெட்டு போகும் என்பதோ என் வாதம் அல்ல. இதை இப்போது இங்கு ஏன் திணிக்க அல்லது மக்களிடையே பரப்ப முயல்கிறார்கள் என்ற கேள்விதான் எனக்குள் புரியாமல் ஓடிக்கொண்டிருகிறது. 

ஆட்டிசம் என்பது ஒரு கொடிய நோயல்ல; ஓர் மன ரீதியான கோளாறு மட்டுமே என்று சொல்வதை போலவும், கொடும் தொற்று நோயால் பாதிக்கபட்டவர்கள் ஒதுக்கி வைக்க பட வேண்டியவர்கள் இல்லை என்று சொல்வதை போலவும், இது போன்ற ஓரின சேர்க்கை, மூன்றாம் பாலினம் போன்ற பிரச்சனைகள் ஒருவகையான ஹார்மோன் கோளாறு மட்டுமே என்றும், இவர்களை ஒதுக்கி வைக்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும் என சொல்லி விழிப்புணர்வு செய்ய வேண்டிய சில தனியார் அமைப்புகளும், திரைத்துறையினரும் இதை ஒரு வேறு வடிவில் மார்க்கெட்டிங் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் தான் ஏன் என புரியவில்லை.

சாதி மறுப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என சொல்கிறார்கள்; பெண்கள் படித்தால் நாளைய சமூகம் நன்றாக முன்னேறும் என சொல்கிறார்கள். அது போல இந்த LGBTQ ஊர்வலங்கள் எதை குறிக்க ஊர்வலம் செல்கின்றது என இதை பெரிதாய் ஊக்குவிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் இந்த மீடியாக்கள் ஆதரித்து ப்ரோமோஷன் செய்யலாம் என்ற எண்ணம் ஏன்? எப்படி? வந்தது என தெரியவில்லை.    

இது போல எண்ணம் கொண்டவர்கள் அல்லது மக்கள் யாவும் நம்மை போலவே சாதாரண மக்கள் தான். யாரும் தம் குடும்பத்தில் திருநங்கையோ, திருநம்பியோ அல்லது இன்ன பிறபாலினங்களோவோ இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டோ, ஆசைப்படுவதோ இல்லை. உடலில் ஹார்மோன் ரீதியான பிரச்சனைகள் காரணமாக இந்த எண்ணங்கள் வருகிறது என சொல்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் ஆதரவு அளித்து அவர்கள் போக்கில் வாழ விட்டு விடவேண்டும். அதை விடுத்து இது போன்ற கேளிக்கை கொண்டாட்டங்கள் அவர்களுடைய நடைமுறையை ஊக்குவிவைப்பது போலவும், இதை பற்றி தெரியாத மற்றவர்களுக்கு நாமே டமாரம் அடித்து இப்படி இருந்தாலும் பரவாயில்லை.. தப்பில்லை என இயற்கைக்கு மாறான ஒன்றை நாமே சொல்லி கொடுப்பது போல தான் இருக்கிறது.  

இரு நாட்களாய் பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வரும் வீடியோக்களை பார்த்த பின் தோன்றியதையே இங்கு பகிர்ந்துள்ளேன்.


நன்றி!!!

பி.விமல் ராஜ்

Saturday, June 4, 2022

விக்ரம் - சினிமா விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகனின் படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளத்துடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் படம் வெளிவந்துள்ளது.

படத்தின் டைட்டில் டீஸரே "Once Upon a Time There Lived a Ghost" என ஆரம்பித்து பலரை விருந்துக்கு அழைத்து, வேட்டு வைப்பது என அதகளமாய் இருந்தது டீசர். ட்ரைலரிலும் மாஸான ஆக்ஷன் த்ரில்லராகவே காட்டியுள்ளனர். மேலும் பல சினிமா டிகோடர்கள் மார்வல் யூனிவெர்ஸ் போலவே லோகேஷ் யூனிவெர்ஸ் இருக்கிறது; இந்த படத்துக்கும் கைதி படத்துக்கும் சில ஓற்றுமைகள், கனெக்ஷன் இருக்க போகிறது என்ன சொல்லி யூகித்து வந்தனர். பகத் பாசில் போலீஸ், கமலின் மகன் தான் சூர்யா, ட்ரைலரில் காட்டிய அந்த குழந்தையே சூர்யா தான் என நாளொரு நாளாய் ஒவ்வொரு புதிய அப்டேட்டுகளை விட்டு கொண்டே இருந்தது விக்ரம் பட டீம்.

இந்த எதிர்பார்புகளையெல்லாம் மனதில் கொண்டு படம் பார்க்கலாம் என நினைக்கும் போது, ரிலீசன்று விக்ரம் படம் பார்க்க வரும் முன் கைதி படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் என இயக்குனர் கோரிக்கை விட, அப்போதே தெரிந்து விட்டது இவை இரண்டுக்கும் கனெக்ஷன் உண்டு என்று. இரண்டு படங்களையும் எப்படி லிங்க் செய்தார்கள்,  கதை எப்படி ஆரம்பித்து முடிகிறது என்பதை பார்ப்போம். ஆரம்பிக்கலங்களா ???

vikram-movie-review

போலீஸ் கையில் பிடிபட்ட பல கோடி மதிப்புள்ள கோகெயின் சரக்குக்காக போலீஸ் அதிகாரி காளிதாஸ் ஜெயராம் கொல்லப்படுகிறார். அதனால் கொண்ட ஆத்திரமும், நாட்டை போதையியில்லா  நாடாக்கும் முயற்சியிலும், தனி மனித புரட்சியாக காளிதாஸின் தந்தையாக உலக நாயகன் கமல் ஹாசனின் அதிரடி வேட்டையே விக்ரம் படத்தின் கதை.  

கைதி படத்தில் உள்ள சம்பவங்களை இதில் சீக்குவலாக சேர்த்துள்ளனர். கைதியில் வில்லனாக வந்த நார்கோட்டிக்ஸ் அதிகாரி, நரேன், திருச்சியில் பிடிபட்ட 1 டன் சரக்கு என சில விஷயங்கள் இதிலும் வருகிறது. போனஸாக அடைக்கலம், அன்பு, டில்லி, காமாட்சி என கிளைமேக்சில் பலரையும் காட்டி இன்னும் பூஸ்டப் கொடுத்துள்ளனர். 

மேலும் அடுத்த சீக்குவலுக்கு இப்போவே லீட் கொடுத்து சூர்யாவை எல்லோருக்கும் மேல் பெரிய வில்லனாக காட்டியுள்ளனர். சூர்யா இதில் நடிக்கிறார் என்பதை படக்குழு சொல்லாமலேயே சஸ்பென்சாகவே வைத்திருக்கலாம். அது இன்னும் அல்டிமேட் ட்விஸ்ட்டாக இருந்திருக்கும்.

இயக்குனரின் மற்ற படம் போலவே பெரும்பாலும் இருட்டிலேயே கதை நகர்கிறது. அன்பரிவின் ஸ்டண்ட்டும் அனிருத் பின்னணி இசையும் அதிரடியாகவும், அட்டகாசமாகவும் இருக்கிறது. படத்தில் எதிர்பாராத இடங்களில் பல ட்விஸ்ட்கள் இருக்கிறது. அதுவே படத்தின் பெரும் பலம். இன்டெர்வல் ட்விஸ்ட், டினா ட்விஸ்ட், வில்லன் ட்விஸ்ட், கிளைமேக்சில் இரு ட்விஸ்ட்கள் என ஹைப்பர் ஏறிக்கொண்டே போகிறது. 

உலகநாயகனின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருப்பு வெள்ளை தாடியும், முடியுமாய் கரகர குரலில் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார். குழந்தையோடு வரும் பாடலிலும், மகனுக்காக அழும் போதும், கோபப்படும் போதும்  வாழ்ந்திருக்கிறார். 

ஃபகத் பாசில் எப்போதும் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் ஏஜெண்டாக வந்து குற்ற சம்பவங்களை தன் டீமுடன் கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி. சில காட்சிகள் மட்டுமே வந்து இறந்தும் விடுகிறார். விஜய் சேதுபதி மெயின் வில்லனாக எப்போதும் போல அசத்தியுள்ளார். அவரது அறிமுக காட்சியும், பல்லிடுக்கில் அவர் வைக்கும் போதை மருந்து மேனரிஸமும், வீட்டில் பாம் வைத்துள்ளனர் என்று தெரிந்தவுடன் அவர் பதறும் விதமும் அருமை. 

சில இடங்களில் லாஜிக் சறுக்கல்களும், வேகதடைகளும் இருக்கதான் செய்கிறது. கிளைமேக்ஸில் தீபாவளி கொண்டாடுவது போல குண்டுகள் வெடித்து சிதறிக்கொண்டிருந்தாலும் போலீஸ் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கமல் எப்படி தலைமறைவாகவே இருந்தார்.? ஆயுதங்களை எப்படி அங்கு கொண்டு வந்தார்?? என நீள்கிறது சந்தேகங்கள்... மேலும் படத்தின் வேகதடைக்கு காரணம் கதையின் நீளமா ? இல்லை தொடர் சண்டை காட்சிகளா? என்னவென்று தெரியவில்லை. 

ஆனால் அந்த சறுக்கல்களெல்லாம் கதையின் ஓட்டத்தில் ம(றை)றந்து விடுகிறது. ஏற்கனவே இயக்குனர் கைதி எடுக்கும் போதே சீக்குவலுக்கு யோசித்து தான் எழுதினாரா? இல்லை விக்ரம் கதைக்காக கைதி படத்துடன் சேர்த்து வருமாறு திரைக்கதை எழுதினாரா என தெரியவில்லை. இரண்டுமே நன்றாகவே பொருந்தியிருக்கிறது. விக்ரம் -3 -ல் சூர்யாவின் வில்லத்தனம், அதோடு இன்னும் சில ஆசிரிய திருப்பங்களை வைத்துள்ளாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!

பி. விமல் ராஜ்    


Tuesday, May 24, 2022

கோவிலா? மசூதியா??

வணக்கம், 

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவது இந்தியாவில் உள்ள முகலாய காலத்து மசூதிகள், கோவில்களை இடித்து கட்டப்பட்டதா? என்ற பெரும் சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 1992ஆம் ஆண்டு, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி (Babar Masjid) ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இடிக்கப்பட்டது. இதன் காரணமாக பல மத கலவரங்கள் நடந்து பலரின் உயிரும், உடமைகளும் பறிபோனது. இந்த வழக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ல் தீர்ப்பானது. இங்கு இடிக்கப்பட்ட மசூதிக்கு கீழே எந்த இந்து கோவில்களுக்கான கட்டிட அமைப்பும் இல்லை என்றும், சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில ராமர் கோவிலும், அதனருகே சற்று தள்ளி 5 ஏக்கர் இடத்தில் மசூதியும் கட்டி கொள்ளலாம் என கூறியுள்ளது. 

இப்போது அடுத்ததாக சில மசூதிகளையம்/முகலாய கட்டிடங்களையும் சிலர் குறி வைத்துள்ளனர். 

Dispute on Mosques in India

வாரணாசியில் உள்ள ஞானவாபி (Gyanvapi Mosque) மசூதி காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டது என்றும், மசூதியில் உள்ள சுவற்றில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மசூதியிலுமுள்ள கிணற்றில் சிவலிங்கம் ஒன்று உள்ளதாக சொல்கிறார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சில புகைப்படங்களும் உலா வருகிறன்றன. அவை போலியா? உண்மையா என தெரியவில்லை. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விரைவில் தீர்ப்பாக உள்ளது.

மதுராவில் உள்ள ஷாஹி இடிகா மசூதி ( Shahi Idigah Mosque) அவுரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டது. இது கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளதக சொல்கிறார்கள். கிருஷ்ணரின் கொள்ளு பேரன் வஜ்ரநாப் என்பவர் கிருஷ்ணருக்கு இங்கு கேசவ் தேவ் கோவிலை கட்டியுள்ளார். பின்னர் குப்த மன்னரிகளின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் இக்கோவில் இடிக்கப்பட்டு ஷாஹி இடிகா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 20ஆம் நூற்றாண்டில் பலரின் உதவியால், கேசவ் தேவ் கோவில் புதுப்பித்து மசூதியருகே கட்டப்பட்டு உள்ளது. புராண கதைகளின்படி கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா சிறைச்சாலை, சிறுவயதில் வாழ்ந்து விளையாடிய கோகுலம், பிருந்தாவனம் ஆகிய இடங்ககள் என 13.7 ஏக்கர் இடம் சர்ச்சையில் உள்ளது. வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ளது.

மத்தியபிரதேசத்தில் தர் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா - கமால் மௌலா மசூதி (Bhojsala -Kamal Maula Mosque). 2003 வரை இந்துக்கள், வசந்த் பஞ்சமியன்று இசுலாமியர்கள் நமாஸ் படித்த பின்னர் உள்ளே சென்று வழிபட அனுமதிக்க பட்டுள்ளனர். இப்போது இரு தரப்பினரும் இந்த இடத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். 10ஆம் நூற்றாண்டில் பாராமரா வம்சத்தை சேர்ந்த போஜ் மகாராஜா கட்டிய வாகதேவி (சரஸ்வதி கோவில்) என்றும், இது பாடசாலையாக இருந்துள்ளது என்றும் சொல்கின்றனர். பின்னர் டேளவார் கான் கோரி  என்னும் முகலாய அரசன் மசூதியாக மாற்றி காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கும் மத்திய பிரதேச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அதோடு இல்லை, தில்லியில் உள்ள குதுப் மினார் (Qutub Minar) பல ஜெயின் மற்றும் இந்து கோவில்களை இடித்து முகலாய மன்னர் குதுப்புதின் ஐபக் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று (மே 24, 2022) தில்லி நீதிமன்றம் குதுப் மினார் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடமே என்றும், வழிபாடும் இடம் அல்ல என்றும், மீண்டும் இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

உலக அதிசயமான தாஜ் மகாலையும் (Taj Mahal) விட்டு வைக்கவில்லை. அது தேஜோ மஹாளயா  என்னும் சிவன் கோவில் என்றும், அதனை மாற்றி தான் மும்தாஜ் சமாதியை ஷாஜஹான் காட்டியுள்ளார் என்றும், தாஜ்மாகாலுக்கு அடியில் சிவன் கோவில் உள்ளது என்றும் சொல்கின்றனர். அடித்தளத்தில் உள்ள 22 அறைகள் இருப்பதாகவும், அதில் இந்து கோவிலுக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என சொல்லி வருகின்றனர். அதுபோக ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுகளின் ஒருவரான தியாகுமாரி, தங்களின் அரச குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் ஷாஜஹான் அபகரித்து தாஜ் மகால் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்

இன்னும் நிறைய இருக்கிறது, சென்னை மயிலையில் கபாலீசுவரர் கோவில் முன்னர் இருந்த இடத்தில் இருந்து இடிக்கபட்டு இப்போதுள்ள சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர். பிற்காலத்தில் இப்போதுள்ள இடத்தில கோவில் மாற்றி கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

இந்தியா முழுவதும் இதே போல பல தேவாலயங்களும், பல மசூதிகளும் கட்டப்பட்டுள்ள இடங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அனைவருக்கும் தெரிந்தது போலவே முகலாய/ஐரோப்பிய படையெடுப்புகள் மூலம் பல செல்வங்கள், வளங்கள், புராதன கோவில்கள், கட்டிடங்கள் என பலவற்றை இழந்துள்ளோம். படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட/கட்டப்பட்ட கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், அரண்மனைகள் என எல்லாமே சரித்திர நிகழ்வு (பிழை) தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தினால் மாறிய விஷயங்கள் பல இருக்கிறது. இதை அப்படியே விட்டு விடுவதே சால சிறந்தது. அதை மனதில் கொண்டு, இப்போதுள்ள மக்கள் வழிபடும் இடத்தில் உரிமை கோருவது சிலரின் அறிவிலிதண்மையை காட்டுகின்றது. இது முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லாமல் தெரிகிறது.   

1991 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின்படி Places of Worship Act, 1991 (வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991) பாபர் மசூதி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 நாளுக்கு முன்னர் வழிப்பாட்டு தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் கூறுகிறது. 

ஏற்கனவே அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என கூறி 450 ஆண்டு கால வரலாற்றை சிறப்பு மிக்க பாபர் மசூதியை இடித்தன் மூலம் இன்றும் மத கலவரங்களும் சர்ச்சைகளும் ஓடி கொண்டே இருக்கின்றது. மீண்டும் இதை தொடர்வோமாயின் இந்தியாவின் பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், எதிர்கால வளர்ச்சியும் கேள்விக்குறி ஆகிவிடும். 


நன்றி!!!

பி. விமல் ராஜ் 


Sunday, May 15, 2022

சென்னை பகுதிகளின் பெயர் காரணம்!

வணக்கம்,

தமிழ்நாட்டின் வரலாறு மிக தொன்மையானது. தமிழின் வரலாற்றை சொல்லும் போது தஞ்சை, காஞ்சி, திருச்சி, மதுரை, மாமல்லபுரம், நெல்லை என மற்ற மாவட்டங்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் சென்னையை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரம் ஒரு வேகமாக வளரும் நவீன தலைநகரம் என்று வைத்து கொண்டாலும், இதன் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. 

பல்லாவரம் அருகே மலைகளில் கற்கால சான்றுகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள பல கோவில்கள் 1000-1500 ஆண்டுகள் பழமையானது. அச்சமயத்தில் இந்த இடத்திற்கு சென்னை என பெயர் இருந்திருக்கவில்லை. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்றும், தொண்டை மண்டலம் என்று அழைக்க பட்டுள்ளது. தர்மாலா சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை ஆனது.  

ஏற்கனவே தமிழக ஊர்களின் பெயர் காரணம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதில் சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சென்னையில் உள்ள பல இடங்கள் (ஏரியாக்கள்), பாக்கம், ஊர், சாவடி, கரை, சேரி, என முடிவது  போல இருக்கிறது.

பாக்கம் என முடியும் பல ஊர்கள், நீர்நிலை (குளம்/ஏரி) அருகே உள்ள ஊராகவோ/இடமாகவோ இருக்கும். சாவடி என முடியும் இடங்கள், சுங்க சாவடி இருந்த இடமாக இருக்கும். கரை என முடியும் ஊர்கள், ஆற்றுக்கு அருகே உள்ள ஊரின் பெயராக இருக்க கூடும். பெரும்பாலான இடங்கள் கோவில் மற்றும் இந்து புராண பின்னணியில் உள்ள பெயராக இருந்திருக்கிறது. சில ஊர்களின் பெயர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் உருவாக்கபட்டு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.

ஆவடி (Avadi)- 'ஆ 'என்றால் பசு, குடி என்றால் வீடு/இடம் என்பதாகும். பசுக்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், ஆயக்குடி அல்லது ஆவக்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஆவடி என அழைக்கபட்டிருக்கலாம்.

அம்பத்தூர் (Ambattur) - சக்தி பீட கோவில்களில் ஐம்பத்தி ஓராம் (51) ஊர் என்பதற்காக இப்பெயர் பெற்றது.

வில்லிவாக்கம் (Villivakkam) - வில்வ மரங்கள் அதிகம் என்பதால் இவ்விடம் வில்லிவாக்கம் ஆனது.

நடுவான்கரை (Naduvankarai) - கூவம் ஆற்று படுகை அருகே உள்ள கரை என்பதால் இது நடுவான்கரை என பெயர் பெற்றது. இப்போதைய அண்ணா நகர்.

திருவான்மியூர் (Thiruvanmiyur) - வால்மீகி முனிவருக்கு இங்கு கோவில் இருந்தது என்பதற்காக திருவால்மீகியூர் என அழைக்கப்பட்டு, பின்னர் திருவான்மியூர் ஆனது.

மந்தவெளி (Mandaveli) - கூவம் ஆறு அருகே ஆடுமாடுகள் மேயும் மந்தைகள் மிகுந்த பகுதி என்பதால் மந்தைவெளி எனஆனது.

அமைந்தகரை (Amjikarai) - கூவம் ஆற்றின் அருகே இருப்பதால் இது அமைந்தகரை.

அடையாறு (Adyar) - சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளில் ஓன்று அடையாறு. அதன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பட்டினபாக்கம் (Pattinapakkam) - 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் இங்கு வந்து தியாகராஜ கோவிலில் வழிபட்டு முக்தி அடைந்ததாலேயே பட்டினம்பாக்கம் என பெயர் பெற்றது.

திருவொற்றியூர் (Thiruvotriyur) - 'ஒற்றி ஊர்' என்பதற்கு அடமான இடம் என்று அர்த்தம். பல்லவ மன்னர்கள் காலத்தில் இந்த இடம் அடமானத்தில் இருந்தது என சொல்லப்படுகிறது. அப்பெயர் பின்னாளில் திருவொற்றியூர் ஆனது.

புராண கதையின் படி, பிரளய  காலத்தில்  இந்த உலகை  அழியாமல் காக்கும் பொருட்டு சிவபெருமானிடம் எல்லோரும் வேண்டிக் 
கலங்கினர்அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார்அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு 'திரு ஒற்றியூர்'  என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் 
என மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

வியாசர்பாடி (Vyasarpadi) - வியாச முனிவரின் பெயரால் இப்பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

பார்க் டவுன் (Park Town ) - சென்னை சென்ட்ரல் அருகே 1970 முன் வன உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. பின்னாளில் இடப்பற்றாக்குறை காரணமாக அது வண்டலூருக்கு மாற்றியமைக்கபட்டது.

கொசபேட்டை(Kosapet) - மண் பபாண்டங்கள் செய்யும் குயவர்கள் பேட்டை என்ற பெயரே கொசப்பேட்டை ஆனது.

தண்டையார்பேட்டை(Tondaiyarpet) - 18ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி என்ற ஊரில் பிறந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தார். அதனால் இது தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார்பேட்டை ஆனது.

வண்ணாரப்பேட்டை (Washermanpet/Vannarapet) - பக்கிங்ஹாம் கால்வாய் அருகே துணி வெளுக்கும் தொழிலாளர்கள் வசித்த இடம் என்பதாலேயே இது வண்ணாரப்பேட்டை என்றானது
சிந்தாதரிப்பேட்டை (Chindadaripet) - துணி நெசவு செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் இடம். 'சின்ன தறி பேட்டை' என்பதே சிந்தாதரிப்பேட்டை ஆனது.

மயிலாப்பூர் (Mylapore)- மயில் ஆடும் ஊர். மயில் ரூபத்தில் பார்வதி சிவனை வணங்கிய இடம் என்பதால் இது மயிலாப்பூர்.

திருவல்லிக்கேணி (Triplicane) - 'திரு அல்லி கேணி'. அல்லி மலர்கள் அதிகம் பூக்கும் இடம் ஆதலால் இது இப்பெயர் பெற்றது.

எழும்பூர் (Egmore) - சூரியன் முதலில் படும் ஊர் என்பதால் எழுமியூர் என பெயர். பின்னாளில் எழும்பூர் ஆனது.

ராயப்பேட்டை(Royapettah) - தெலுங்கு பேசும் நாயக்க மன்னர்களின் தளபதிகளான ராயர்கள் இருந்த இடம் என்பதால் ராயர் பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டை ஆனது.

கொத்தவால் சாவடி (Kotawal Chavadi) - 'கொத்தவால்' என்பதற்கு வரி வசூலிப்பவர் என்று பொருள். வரி வசூல் செய்யும் சாவடி இருந்திருப்பதால் இப்பெயர் வந்தது.

பூந்தமல்லி (Ponnamallee/Poondhamalli) - பூவிருந்த அல்லி - அல்லி மலர்கள் அதிகம் பூத்து குலுங்கும் இடம் அதலால் இப்பெயர் வந்தது.

சேப்பாக்கம் (Chepauk) - Che Bagh. Che -ஆறு ; Bagh - garden (தோட்டம்). ஆறு தோட்டங்கள் உள்ள இடம் என்று பொருள்.

கோடம்பாக்கம் (Kodambakkam) - Ghoda Bagh. Ghoda- குதிரை; Bagh- garden (தோட்டம்). குதிரைகளை கட்டி வைக்கப்பட்ட இடம் என போறும். அதுவே கோடம்பாக்கம் ஆனது.

சேத்துப்பட்டு (Chetpet) - 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னையில் பல கட்டிடங்களை கட்டியவர் நம்பெருமாள் செட்டியார். அவர் பெயராலேயே இது செட்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் சேத்துப்பட்டு என்றானது.

அண்ணா சாலை (Anna Salai/ Mount Road) - செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயின்ட் தாமஸ் மலைக்கு செல்லும் பாதை என்பதால் அது மவுண்ட் ரோடு என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் அது அண்ணா சாலை ஆனது.

மாம்பலம் (Mambalam) - மஹா வில்வ அம்பலம் என்ற பெயர் கொண்ட இப்பகுதி, நிறைய வில்வ மரங்களை கொண்டது. அதுவே பின்னர் மாம்பலம் ஆனது.

தேனாம்பேட்டை (Tennampet) - தென்னம் பேட்டை. தென்னை மரங்கள் அதன் இருக்கும் பகுதியாக இருந்ததால் தென்னம் பேட்டை. அதுவே தேனாம்பேட்டை ஆனது.

நந்தனம் (Nandanam) - பூத்து குலுங்கும் நந்தவனம் இருந்த பகுதி பின்னாளில் நந்தனம் ஆனது.

சைதாப்பேட்டை (Saidapet) - ஆற்காடு நவாபின் தளபதி சையது ஷாவின் பெயரால் இது சையது ஷா பேட்டை என அழைக்கப்பட்டு, பின்னர் சைதாப்பேட்டை ஆனது.

பரங்கிமலை (St. Thomas Mount) - கிருத்துவத்தை பரப்ப வந்த பரங்கியர் வாழ்ந்த /இருந்த மலை என்பதாலேயே இது பரங்கிமலை என அழைக்கப்பட்டது. இன்னொரு சிலர், பிருங்கி முனிவர் செய்த இடம் என்பதாலேயே பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் பரங்கி மலை ஆனது.

கிண்டி (Guindy) - பிருங்கி முனிவர் தவம் செய்து அவரின் கிண்டி (கமண்டலம்) இருந்த இடம் என்பதால் இது கிண்டி என பெயர் பெற்றது.

நங்கநல்லூர் (Nanganallur) - நங்கை நல்லூர். நங்கை என்பது திருமணம் ஆகாத கன்னி பெண்ணை குறிக்கும். இங்கு நங்கையாக இருக்கும் ராஜராஜகேஸ்வரி அம்மன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

மீனம்பாக்கம் (Meenambakkam) - இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்வளம் அதிகமாக இருந்துள்ளதால் மீனம்பாக்கம் என பெயர் வந்தது.

திரிசூலம் (Thirusoolam) - இங்குள்ள திரிசூலநாதர் கோவில் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பல்லாவரம் (Pallavaram) - பல்லவர்கள் இருந்த இடம் என்பதால் பல்லவபுரம் என்று குழிக்கஅழைக்கப்பட்டு பின்னர் பல்லாவாம் ஆனது,

கிரோம்பேட்டை (Chromepet) -  தோல் தொழிற்சாலை இருந்த இடம் என்பதால் இது (கிராம் லெதர்) கிரோம்பேட்டை ஆனது.

தாம்பரம் (Tambaram) -  தாமாபுரம் என்ற பெயர் செங்கல்பட்டு திருகச்சூர் சிவன் கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவே தாம்பரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  தாம்பு என்பது கயிரு என்று பொருளை குறிக்கும். இங்கு கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருப்பதால் தாம்பரம் என பெயர் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மாடம்பாக்கம் (Madambakkam) - திருப்புகழ் நூலில் இந்த இடத்தை பெயரை மாடையாம்பதி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் மாடம்பாக்கம் ஆகியுள்ளது.

ராஜகீழ்ப்பக்கம் (Rajakilpakkam) - சோழ காலத்தில் மன்னர்கள் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் பள்ளத்தில் இறங்கி மக்களை பார்த்த இடம் ராஜகீழ்ப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

பெருங்களத்தூர் (Perungalathur) - ஒரு காலத்தில் நிறைய குளங்கள் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்தது.

இன்னும் சில இடங்களின் பெயர்கள் சமீப காலத்தில் சேர்க்கபட்டதால் காரண பெயர்கள் சரிவர தெரியவில்லை. மேலும் சில இடங்கள் வாய்மொழியின் அழைக்கப்படும் காரணமாக மட்டும் இருப்பதால் சரியான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.


நன்றி!!!
பி. விமல் ராஜ் 


Saturday, April 16, 2022

பீஸ்ட் & கே.ஜி.எஃப் : Chapter 2 - சினிமா விமர்சனம்

வணக்கம்,

இது எனது 125 ஆவது பதிவு. கடந்த 9 ஆண்டுகளாக என் எழுத்துக்கு மதிப்பு கூட்டி, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!!! 🙏

இரண்டு படம் ஒரே நேரத்தில் வரும் போது, எந்த படம் வெற்றி அடையும் என்ற கேள்விக்கு இரண்டு படமும் வெற்றி அடைய வேண்டும் என்று ஒரு பேட்டியில் பதில் சொல்லியுள்ளார் நம்ம 'ராக்கிங் ஸ்டார்' யாஷ். அதனால் Beast Vs KGF: Chapter 2 என்று தனித்தனியாய்  இல்லாமல், Beast & KGF: Chapter 2 என இரண்டு படத்துக்கும் ஒன்றாகவே விமர்சனம் எழுதி விடலாம் என நினைத்தேன். வாங்க விமர்சனத்துக்குள்ளே போவோம்.  இன்னைக்கி நாம முதல்ல பாக்க போற படம்...

பீஸ்ட் 

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வந்துள்ள படம் தான் பீஸ்ட். பர்ஸ்ட் லுக் வந்ததிலிலிருந்து இது வேற மாறி...வேற மாறி... என ரசிகர்களும், இயக்குனரும் மாறி மாறி சொல்லிவந்தனர். ஏற்கனவே வந்த இரு பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் reels போடும் அளவுக்கு போயுள்ளதால், எல்லாரையும் போல நாமும் ரிலீசுக்காக காத்திருந்தோம்.

ஒரு தீவிரவாதி கும்பல் மாலில் உள்ள மக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு, அவர்களின் தலைவரை விடுவிக்க கோரி அரசை மிரட்டுகின்றனர். அதே சமயம் மாலில் செக்கூரிட்டி ஆபிஸராக வேலைக்கு போகும் ஒரு முரட்டுத்தனமான முன்னாள் உளவாளி (விஜய்) இருக்க, மக்களை அவர் எப்படி மீட்கிறார் என்பதேயே கதையாக ட்ரைலரில் காட்டினார்கள். இதற்கு முன் இயக்குனரின் டாக்டர் படத்தில் ட்ரைலரில் வேற மாறி கதையும், படத்தில் வேற மாறி டார்க் காமெடியாக காண்பித்தது போல, இதிலும் செய்வார்கள் என நினைத்தேன். ஆனால், அப்படி செய்யவில்லை; நம்மை தான் நல்லா வச்சு செஞ்சுட்டார்கள்.

டிரைலரில் சொன்ன அதே கதை தான். இயக்குனர் நெல்சன் கொஞ்சம் சீரியஸா யோசிச்சு படம் எடுத்திருந்தா செமையா வந்திருக்கும். ஆனா உண்மை என்னன்னா சீரியல் அளவுக்கு கூட யோசிக்கல. ஒரு சில காட்சிகள் தலையில அடிச்சிகிற மாறி எடுத்து வச்சிருக்காங்க. கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது தான், அதுக்காக இப்படியா நெல்சன் ?


மால் போன்ற பெரிய செட், ஆப்கானிஸ்தான் செட்டெல்லாம் உண்மையிலேயே நன்றாக பிரமாண்டமாக இருந்தது.

அனிருத் இசையில் பாடல்கள் கேட்க ஜாலிலோ ஜிம்கானாவாக இருந்தாலும் இந்த இடத்தில் ஏன் இந்த பாட்டு என யோசிக்க வைக்கிறது. Beast BGM உன்மையிலேயே தாறுமாறு!👌 இப்ப கூட என் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது.

விஜயின் நடிப்பு மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் குட். அவர் திரையில் அழகாய் தெரிகிறார். ஆக்ஷன், காமெடி, டான்ஸ், அவருடைய நக்கல், சர்காஸம் என எல்லாம் சரியாக செய்துள்ளார். அவர் ஏன் உளவாளி வேலையை விட்டார், ஏன் இந்த மாலில் உள்ளவர்களை காப்பாற்ற முயல்கிறார் என அதற்கான காரணத்தையெல்லாம் சரியாய் சொல்லிவிட்டு, கதையை சொதப்பி வைத்துள்ளனர்.  

நாயகி பூஜா ஹெக்டே எப்போதும் போல சில காட்சிகளுக்கிடையே வந்து போய்விட்டார். 

செல்வராகவன் என்னும் இயக்குனர் அரக்கனை, நடிக்க விட்டுவிட்டு எப்படி டம்மி ஆக்கிவிட்டார் பாருங்கள் என அங்கலாய்த்து கொள்ள வேண்டியது தான்...ஹ்ம்ம்.. அதுவும் அமைச்சருடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் லொள்ளு சபா சந்தானம் - மனோகர் வசனங்களை போல கலாய்த்து கொள்ளு(ல்லு)ம் வசனங்களாக இருக்கிறது. படம் பார்க்கும் போது நாமே அட கண்ணறாவியே என கடுப்பாகி விடுவோம்.

மலையாள நடிகர் டாம் சாக்கோ தீவிரவாதி தலைவனாக, ஹைஜாக் ஆப்ரேஷனை சரியாய் செய்யாமல், குழப்பி கடைசியில் ஹீரோ கையால் சாகிறார்.

யோகிபாபு, டாக்டரில் நடித்த மாகாளி, கிளி, வி.டி.வி கணேஷ் என எல்லோர் பாத்திரமும் வீண். முதல் இரண்டு படங்களில் டார்க்  காமெடியில் புகுந்து விளையாடிய இயக்குனர், பீஸ்ட்-ல் நம்ம டிக்கெட் காசில் டார்க் காமெடி செய்துவிட்டார். 

பெரிய நடிகரை வைத்து எந்த புது தலைமுறை இயக்குனர் இயக்கினாலும் இப்படி தான் இருக்கும் போல. நெல்சனின் அடுத்த படம் சூப்பர் ஸ்டாருடன் என யோசிக்கும் போது, இப்பவே என் கண்ணில் நீர் வழிகிறது...🙄😭

இரண்டு நாளாய் கலவையான விமர்சனம் வந்த போதும், யார் சொல்லியும் கேட்காமல், "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.." என Beast க்கு போய் நான் கடுப்பில் Burst ஆனது தான் மிச்சம். விஜய் ரசிகர்கள் மட்டும் பார்த்த, சிலகிக்க வேண்டிய படம். மற்றவர்கள் இதை படித்தும் பார்க்க ஆசை என்றால், ஒரு முறை பார்க்கலாம்.

கே.ஜி.எப்: Chapter 2

கே.ஜி.எஃப் முதல் பாகத்தை தியேட்டரில் பார்க்காத பலர், இம்முறை கண்டிப்பாக தவறவிட்டிருக்க மாட்டார்கள். நானும் தான்!  K. G. F: Chapter 1 முழுவதும் ஆக்ஷன், ஆங்காங்கே அம்மா சென்டிமன்ட், ஹீரோ பில்ட்அப் என கலந்து கட்டி கமர்ஷியல் கலவையாக பான் இந்தியா படமாக கல்லா கட்டினார்கள். வசனங்களும், ஒரு சில சிலிர்க்க வைக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போனது.  

அதே வேகத்தோடு இரண்டாம் பாகம் இருக்குமா? என்ற மிக பெரிய கேள்விக்குறியோடு படம் பார்க்க சென்றவர்கள், களிப்பு பெருமிததோடு தான் படம் பார்த்து விட்டு போனார்கள். பொதுவாக முதல் பாகத்தின் தாக்காதாலும், வெற்றியினாலும் தான் இரண்டாம் பாகம் எடுப்பார்கள். இங்கு படம் எடுக்கும் போதே இரண்டாக பிரித்து, இரண்டாம் பாகத்துக்கு தனி கதை என ஒரு வித வெற்றி ஃபார்முலாவை வைத்து முயற்சி செய்து, வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

கருடனை கொல்ல KGF வந்த ராக்கி பாய், தங்கம் இங்கிருந்து தான் எடுக்கப்படுகிறது என அறிந்து அந்த சாம்ராஜ்யதிற்குத் தானே அதிபதி ஆகி விட எண்ணி கருடனை போட்டு தள்ளுவதில் முடியும் முதல் பாகம், அவர் எப்படி அந்த தங்க சுரங்க ராஜாங்கத்தை ஆட்கொண்டார், எப்படி எதிரிகளை விழ்த்தினார், நாட்டிற்கே எப்படி சிம்ம சொப்பனமாக மாறி பின்னர் எப்படி royal death ஆகிறார் என்பதே கே. ஜி. எஃப்: Chapter 2 வின் கதை.

முதல் சீனிலேயே ராக்கியின் அம்மா வந்து கதை சொல்லுகிறார் (பிளாஷ் பேக் கட்). அது தான் கிளைமாக்ஸாக இருக்குமோ என நினைத்தேன். அதேதான்... பின்வரும் நாளில் விட்ட இடத்திலிருந்து இன்னொரு புதையல் வேட்டை கதை எடுக்க வாய்ப்புண்டு. படம் பார்ப்பவர்களுக்கு புரியும்... 😉

யாஷ் பெரிய ராஜாங்கத்தை கட்டி ஆளும் தாதா /கிரிமினல் சுல்தானாக வந்து கம்பீரமாய் செல்கிறார். சண்டை காட்சியிலும், அம்மா பாசத்தை காட்டும் போதும் அதகள படுத்தியிருக்கிறார். படம் முழுக்க கோட் சூட்டுடன் எப்போதும் கையில் பாட்டிலோடு வந்து, எதிர்பவர்களையெல்லாம் மிஷின் கன்னால் டுப்..டுப்..டுப்..டுப் என சுட்டு தள்ளி விடுகிறார். மிச்சம்வர்களை ஒரே அடியில் மட்டையாக்கி விடுகிறார். "என்னை வெல்பவன் எவனடா?" என கெத்து காட்டியுள்ளார். ஆரம்பித்தது முதல், படம் முழுக்க ராக்கி பாய் பன்ச் பேசி கொண்டே இருக்கிறார். வில்லன்ஸ் குரூப் வேறு ஹீரோக்கு பில்டப் கொடுத்து கொண்டே போகின்றனர். அதை மட்டும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம். 

சஞ்சய் தத் மெயின் வில்லன் அதிராவாக வந்து மிரட்டுகிறார். பல முறை அடிபட்டு, சாகும் அளவுக்கு போய், பீனிக்ஸ் பறவை போல திரும்பி வந்து ஹீரோவை எதிர்த்து கடைசியில் இறக்கிறார். பிரகாஷ் ராஜ் அவரது தந்தை இடத்தில் இருந்து கொண்டு கே. ஜி. எஃப் -ன் கதையின் இரண்டாம் பாகத்தை நமக்கு சொல்கிறார். மற்ற கமர்ஷியல் பட ஹீரோயின் போல சில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்லாமல், வசனம் நிறைய இல்லையென்றாலும் படம் முழுக்க அழகாக வலம் வந்து கிளைமாக்ஸ் சண்டைக்கு காரணமாகி இறக்கிறார் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி. Chapter 1ல் முகம் காட்டாத ரவினா டன்டன், இதில் பிரதமர் ரெமிகா சென்னாக வந்து கம்பீரமாய் போகிறார். பெரிய கம்பேக் ரோல் தான். இன்னும் Chapter 1 -ல் நடித்த பலர் இதிலும் வந்து போயுள்ளனர்.

சவ சவ என இழுத்து கொண்டே போகும் படத்தின் முதல் பாதி, இண்டர்வெலில் சூடு பிடித்து "அட!" போட வைக்கிறது. இரண்டு மூன்று காட்சிகளில் "செம்ம டா" என சொல்லி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். உண்மையிலேயே படத்தை ரசிக்கும் படியாக, மாஸாக கொடுத்து யாஷ்க்கு மேலும் மாஸ் கூட்டியிருக்கிறார்.

முதல் பாகம் போல KGF சுரங்கமும், மாளிகையும் தான் இதிலும் வருகிறது. படம் முழுக்க தூசும், மண்ணும், தெறிக்கும் புல்லட்டும் தான் பறக்கிறது.

அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் செய்ய முடியுமா? எங்காவது நடக்குமா?? என லாஜிக் பார்க்க முடியாத, பக்கா south indian மசாலா காட்சிகளாக சில இருந்தாலும், கதையின் ஓட்டத்தில் புல்லட்டை விட வேகமாய் கடந்து மறைகிறது.

மொத்தத்தில் KGF: CHAPTER 2 என்னும் அதிரடி மாஸ் மசாலாவை அலுப்பு தட்டாமல் மீண்டும் கொடுத்திருக்கிறார்கள் கன்னட சந்தன கட்டைகாரர்கள் (Sandalwood).😁


நன்றி!!!

பி.விமல் ராஜ்

Thursday, April 7, 2022

தீண்டத்தகாத பாத்திரங்கள் !

வணக்கம் ,

ஒரு சின்ன இடைவேளை விட்டு மீண்டும் எழுதுகிறேன். பல நாட்களாக கிடப்பில் இருந்த ஒரு பதிவை தூசி தட்டியுள்ளேன். பதிவு மட்டுமல்ல; இதன் கருத்தும் தூசி தட்டப்பட வேண்டியவை தான். கருத்தை ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிக்கிறேன்..

ஒரு வீட்டு சமையலறையில், ஞாயிற்றுகிழமை மாலை வேளையில்...

அலுமினிய கடாய் அக்கா: ஏண்டி! எப்பவும் ப்ரில் போட்டு விளக்கி வைச்ச புது பொண்ணு மாற்றி பளபளன்னு இருப்ப... இப்போ ஏன் மங்களா பிசுபிசுன்னு இருக்கே.. இன்னைக்கி உன்னை வீட்டு ஐயா விளக்கி வைச்சாரா??

சின்ன எவர்சில்வர் டமரா: ஹ்ம்.. போங்கக்கா.. மனசே சரியில்ல..

அலுமினிய கடாய் அக்கா: ஏன்?? என்னாச்சு??? 

சின்ன எவர்சில்வர் டமரா: அக்கா, நம்மை மட்டும் என் இப்படி ஒதுக்கி வச்சுருக்காங்க.? 

அலுமினிய கடாய் அக்கா: உன்கிட்ட முட்டை ஊத்தி அடிச்சு ஆம்லெட் போடறாங்க.. என்கிட்டே கறி வறுவல், இல்லன்னா கிரேவி செய்றாங்க.. நானும் நீயும் அசைவ சாப்பாடு சமைக்கிற பாத்திரங்கடி.. அதான் நம்மை தனியா வைச்சுருக்காங்க. கழுவி வைச்சாலும் ஒரு மூலையிலே போட்டு வைப்பாங்க.. நம்ம ரெண்டு பேர் மட்டுமா?? அலுமினிய பேசின் பெரியம்மா,  நம்ம பெரியக்கா மண்சட்டி கடாய்,  மீன் கரண்டி மாமா, எல்லாரும் தான்...

சின்ன எவர்சில்வர் டமரா: நம்ம எல்லாத்தயும் ஒரே கடையில தான வாங்குனாங்க.. எப்படி இருந்தாலும் மட்டன் சாப்ஸோ, அக்காரவடிசலோ எல்லாத்தையும் ஒரே தட்டுல போட்டு தான சாப்பிட போறாங்க??

அலுமினிய கடாய் அக்கா: அட..ஆமாண்டி..சரி தான்... சோறு போட்டு வெண்டைக்காய் சாம்பார், உருளை கிழங்கு வறுவல்ன்னு தட்டுல தான் சாப்பிடுவாங்க. ரசத்தை தட்டுல ஊத்தி உறிஞ்சி குடிப்பாங்க.. அதே தட்டுல தான் பிரியாணி போட்டு சாப்பிடுவாங்க, கறி குழம்பு ஊத்துவங்க, முட்டை பொடிமாஸ் செய்வாங்க.. அதிலேயே சாப்பிட்டுடுவாங்க.. தட்டை சாப்பிட்டுட்டு கழுவிடுவாங்கல்ல.. அதனாலதானோ ??

சின்ன எவர்சில்வர் டமரா: ங்கே... என்னது.. அப்ப மத்த பாத்திரத்தையெல்லாம் கழுவ மாட்டாங்களா ?? 

அலுமினிய கடாய் அக்கா: கழுவுவாங்.. ஏய்.. இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேட்டா எனக்கு பதில் தெரியாது பாத்துக்கோ..

ஆனாலும் கொஞ்சம் ஓவரா ஆச்சாரம் பாக்குறவங்க இப்படி தான் தனித்தனியா பிரிச்சு வைப்பாங்க.. 

சின்ன எவர்சில்வர் டமரா: அதுக்குன்னு மீன் சாப்பிட்ட/தொட்ட கையோட ரசம்/மோர் பாத்திரத்தை கூட தொடாம இருக்குறது.. அசைவம் சமைக்கிற பாத்திரத்துல, வேற எந்த பாத்திரத்தையும் கலக்காம இருக்கிறது எல்லாம் எப்படி சரியாகும்... நாமும் அவங்க வீட்டு பாத்திரம் தானே?!? சொந்த வீட்டுல, சொந்த பாத்திரத்தையே இப்படி பண்ணுனா.. ம்ம்ம்..  என்னக்கா பண்றது... 

அலுமினிய கடாய் அக்கா: சரி ..சரி .. விடு . ஒரு சிலரெல்லாம் இப்படி தான்... சபீனா போட்டு விளக்கி வைச்சா எல்லா விளக்கமாறும் பாத்திரமும் ஒண்ணு தான்னு இங்க பல பேர்க்கு தெரியல.. . இவுங்கெல்லாம் ஓட்டல்ல போனா என்ன பண்ணுவாங்க?? ஹஹா....ஹஹா..ஹஹா....ஹஹா...

சின்ன எவர்சில்வர் டமரா: ஆமா..ஆமா ..ஹா ..ஹஹா....ஹஹா..